Lakshya Sen pt web
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்| கடைசிவரை டஃப் கொடுத்து லக்‌ஷயா சென் தோல்வி! வெற்றிபெற்ற வீரர் சொன்ன அந்த வார்த்தை!

Angeshwar G

பேட்மிண்டனில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனுடனான அரையிறுதி போட்டியில் போராடித் தோல்வியுற்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்.

பிற்பகலில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில், முதல் போட்டியில் 22-20 என்ற கணக்கில் ஆக்சல்சென் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த சுற்றில் 7-0 என்ற கணக்கில் லக்ஷயா சென் முன்னிலைப் பிடித்திருந்தார். ஆனால், 14-21 என்ற கணக்கில் லக்‌ஷயா ஆக்சல்சனுடன் தோல்வி அடைந்தார்.

முதல் ஆட்டத்தின் முதல் பகுதி, இரண்டாம் ஆட்டத்தில் முதல் பகுதி என இரண்டிலும் லக்‌ஷயா சென் முன்னிலையிலேயே இருந்தார். ஆனால் இரண்டு போட்டிகளிலும் இறுதிக் கட்டத்தில் ஆக்சல்சென் முன்னேறி லக்‌ஷயா சென்னை வீழ்த்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆக்சல்சென் இதுவரை தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்சல்சென் நடப்பு சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் லக்‌ஷயா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுவார். இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் லக்‌ஷயா சென் மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிர்கொள்கிறார். லீ ஜி ஜியா உலக தரவரிசைப் பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளார். மறுபுறம் வெற்றி பெற்ற ஆக்செல்சன் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் விடிட்சார்ன் குன்லவுட்டை எதிர்கொள்கிறார். விடிட்சார்ன் குன்லவுட் உலக தரவரிசைப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

வெற்றி குறித்து பேசிய ஆக்சல்சென், “லக்‌ஷயா சென் திறமையான வீரர். இது மிகக் கடுமையான போட்டியாக இருந்தது. அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 2028 ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் அவர் தங்கம் வெல்வார். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.