பராகுவே நாட்டைச்சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது அழகால் பல இதயங்களை வென்றார். இந்நிலையில், அவரின் அழகு அவருடைய அணியில் உள்ள வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறப்பட்டு, சொந்த நாட்டிற்கு அந்த வீராங்கனை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது
இதை அந்த வீராங்கனை மறுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மனமுடைந்து அவர் தான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீரோடு அறிவித்துள்ளார். இதையடுத்து இவ்விஷயம் பேசுபொருளாகியுள்ளது. இதில் என்ன நடந்தது என பார்க்கலாம்...
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பங்கேற்ற பராகுவே நாட்டின் 20 வயது வீராங்கனை லுவானா, காலிறுதிவரை முன்னேறி அரையிறுதியில் 0.24 வினாடிகளில் தோல்வியை சந்தித்தார். வீரர் வீராங்கனைகள் தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒலிம்பிக் கிராமத்தில் மற்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உடன் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அப்படி சக நாட்டு வீரர்களுடன் தங்கியிருந்த லுவானா அலோன்சோ, தன்னுடைய அதிகப்படியான அழகால் மற்றவீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என்று ஒரு இளம்வீரர் ஒருவர் தங்கள் நாட்டு ஒலிம்பிக் கமிட்டியில் புகாரளித்தார். இதையடுத்து, சொந்த நாட்டினாலேயே நாட்டிற்கு திரும்பும்படி லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான லாரிசா ஷேரர், "அவரது இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. நாங்கள் அறிவுறுத்தியபடி விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் இரவைக் கழிக்காததால் நாங்கள் அவரை அனுப்பிவிட்டோம்" என்று தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் அதிகப்படியான அழகுடன் இருந்ததுதான் காரணமா என்ற கேள்வி எழும் நிலையில், அவரைப்பற்றிய மற்ற அறிக்கைகள் “அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார்” என தெரிவிக்கின்றன.
அதேபோல் “அவர் ஆடை அணியும் விதமும், பிறருடன் பழகும் விதமும் சிலருக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தியது என கூறப்படுகிறது” என்று டெய்லி மெயில் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்நிலையில் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்த லுவானா, “நான் ஒலிம்பிக் குழுவில் இருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்.
நான் இதுகுறித்து எந்த அறிக்கையையும் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன்” என்று ஆவேசமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதினார்.
இருப்பினும் சிறிது நேரத்திலேயே நீச்சல் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக லுவானா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஓய்வுபெறுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “இது இப்போது அதிகாரப்பூர்வமானது! நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவரை அனைவரும் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மன்னிக்கவும், பராகுவே. நான் உங்களுக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும்” என்றுள்ளார்.
மற்றொரு பதிவில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தனக்கு நடந்தவற்றை குறித்து மறைமுகமாக பேசி இருக்கிறார். “நீச்சல், என்னை கனவு காண அனுமதித்ததற்கு நன்றி. நீங்கள் (நீச்சல்) எனக்கு சண்டை, முயற்சி, விடாமுயற்சி, தியாகம், ஒழுக்கம் மற்றும் பலவற்றைக் கற்றுக் கொடுத்தீர்கள். எனது வாழ்க்கையின் ஒரு பகுதியை நான் உங்களுக்குக் கொடுத்தேன். நான் அதை உலகில் எதற்காகவும் மாற்ற மாட்டேன், ஏனென்றால் என் வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களை நான் உங்களுடன் வாழ்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
கண்ணீருடன் விடைபெற்ற லுவானாவிற்கு ஆதரவாக பலபேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2021-ல் டோக்கியோவில் தனது கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகமான அலோன்சோ, தனது தொழில் வாழ்க்கையில் பட்டர்ஃபிளை நிகழ்வுகளில் பல தேசிய சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.