Arshad Nadeem Olympics 2024
ஒலிம்பிக்ஸ்

அன்று ‘ஈட்டி வாங்க காசில்லை’.. இன்று ‘தங்க ஜாவ்லின்’.. பாகிஸ்தான் வீரர் நதீம் உலகை வென்ற கதை!

கடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, 92.97மீ என்ற புதிய ஒலிம்பிக் ரெக்கார்டை படைத்து ஈட்டி எறிதலில் தங்கத்தை தட்டிச்சென்றுள்ளார் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம்.

karthi Kg

ஈட்டி வாங்க கூட முடியாத நிலை..

ஈட்டி எறிதல் பிரிவில் நம் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். பாகிஸ்தான் வீரரான நதீம் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அமெரிக்கா, சீனா என பதக்கங்களை குவிக்கும் தேசங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு தேசத்தின் பின்னாலும் ஒரு பெரும் கதை இருக்கும். பதக்கம் வென்ற வீரரின் வாழ்வில் அதைவிட பெரும் சோகம் இருக்கும்.

arshad nadeem

அப்படித்தான் பாகிஸ்தானின் நதீமும். இன்று தங்க மெடலை சுமந்து நிற்கும் நதீமால், சில மாதங்கள் முன்பு வரை ஒரு புதிய ஈட்டியை வாங்ககூட முடியவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம்.

கொத்தனாரின் மகன்தான் நதீம்..

அர்ஷத் நதீம், பஞ்சாபில் பிறந்தவர். நம் பஞ்சாப் அல்ல. பாகிஸ்தானின் பஞ்சாப். இளம் வயதிலிருந்தே, நதீம் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினார், கிரிக்கெட், பேட்மிண்டன், கால்பந்து, தடகளம் என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டினார் நதீம். மாவட்ட அளவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய போதிலும், ஈட்டி எறிதல் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். தனது தந்தை முகமது அஷ்ரப்பின் ஊக்கத்தால், நதீம் ஈட்டி எறிதலை தொழில்முறையாக தொடர முடிவு செய்தார்.

arshad nadeem

அர்ஷத்தின் தந்தை பாகிஸ்தான் கொத்தனராக பணிபுரிகிறார். அவர் ஈட்டும் சம்பளத்தில்தான் அர்ஷத் பயிற்சிகளை மேற்கொண்டார். அர்ஷத் தன் வீட்டு முற்றத்திலும் தெருக்களிலும்தான் பயிற்சி மேற்கொள்வாராம்.

arshad nadeem

பயிற்சிக்காக அவரை முல்தான், ஃபைசலாபாத் லாகூர் என பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு ஆகும் செலவுகளை கவனித்துக்கொண்டதும் அர்ஷத்தின் தந்தைதான். “இளம் தடகள வீரர்களை அரசு ஆதரிக்க வேண்டும், தடகள வீரர்கள் பயிற்சி செய்யக்கூடிய மைதானங்களை உருவாக்க வேண்டும்” என பலமுறை பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அர்ஷத்தின் தந்தை.

9 ஆண்டுகளாக ஒரே ஈட்டியை பயன்படுத்திய சோகம்...

2015ம் ஆண்டில், நதீம் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கி தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். 2016 பிப்ரவரியில் இந்தியாவின் கவுகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றபோது மீடியாக்கள் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தன. அதன் பிறகு, ஹோ சி மின் நகரில் நடைபெற்ற 17வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2017 மே மாதம் பாகுவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒற்றுமை விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். 2022 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற 27 வயதான நதீம், 90.18மீட்டர் ஈட்டியை எறிந்து தங்கம் பதக்கம் வென்றார்.

arshad nadeem

2015ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சமயம் அவர் வாங்கிய ஈட்டியைத்தான் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார் . சர்வதேச அளவில் போட்டி போடும் ஒரு தடகள வீரருக்கு பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை. 9 ஆண்டுகளாக நதீம் பயிற்சிக்கு பயன்படுத்திய ஈட்டி, இந்த ஆண்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டது.

தேசிய விளையாட்டு ஆணையத்திடம் “ஒரு ஈட்டிக்காக உதவி புரியுங்கள்” என மன்றாடுகிறார் நதீம். இறுதியாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு ஸ்பான்சராக இருக்க சம்மதம் தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில்தான் மீண்டும் பயிற்சிக்கான ஈட்டியைப் பெற்றார் அர்ஷத். இந்திய அரசைப் போல, பாகிஸ்தான் அரசும் வீரர்களுக்கு உதவ வேண்டும் என நம் நீரஜ் சோப்ரா உட்பட பலர் கோரிக்கை வைத்தனர்.

arshad nadeem

இனியாவது பாகிஸ்தான் மாதிரியான தேசங்கள் தங்கள் விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குமா என பார்க்கலாம்.