டைலர் மிஸ்லாஸுக் pt
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்| 10 முறை வாந்தி எடுத்த டிரையத்லான் வீரர்.. செய்ன் நதியின் மாசுபாடு காரணமா? #Video

Prakash J

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். களைகட்டி வரும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் 10 முறை வாந்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர் டைலர் மிஸ்லாஸுக் (Tyler Mislawchuk) டிரையத்லான் (டிரையத்லான் என்பது நீச்சல், ஓட்டம், மற்றும் சைக்கிளிங் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டியாகும்) வீரரான இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். அங்குள்ள செய்ன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு, குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இதுகுறித்து விமர்சனமும் எழுந்தது. மேலும் போட்டி தொடங்கும்போது, காற்றின் வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்தது. எனவே மாசுபாடு மற்றும் வெப்பநிலை காரணமாக டைலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டியில் 1:44:25 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து டைலர் 9வது இடம்பிடித்துள்ளார்.

இதையும் படிக்க: “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்

இதேபோல், பெண்களுக்கான டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஜோலியன் வெர்மெய்லன், செய்ன் நதியில் நிறைய குப்பைகள் இருந்ததாகவும், அதைப் பார்த்து அருவருப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தப் போட்டியில் 24-வது இடத்தைப் பிடித்த அவர், நீச்சல் போட்டியின்போது அதிக அளவு தண்ணீரை விழுங்கியதாகவும், அதன் விளைவாக தனது உடலில் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது பேசுபொருளானது.

முன்னதாக, செய்ன் நதி மாசுபாடு காரணமாக டிரையத்லான் போட்டிகள் தாமதமாக நடந்தது கவனிக்கத்தக்கது. நதி நீரின் தரம் காரணமாக டிரையத்லான் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆண்களுக்கான டிரைத்லான் போட்டி முதல் நாளில்இருந்து மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாரிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக பிரான்ஸ் அதிகாரிகள், பல ஆண்டுக்காலமாக மாசுபட்டு இருந்த செய்ன் நதியை சுத்தம்செய்ய 1.5 பில்லியன் டாலர் செலவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆற்றில் ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது தண்ணீரில் உள்ள ஈ.கோலி பாக்டீரியா அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட, 10 மடங்கு அதிகமாக இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈ.கோலி பாக்டீரியா என்பது பெரும்பாலும் மலத்தில் காணப்படும். அது வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை தொற்று, நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க: வன்முறை பரவுவதாக வதந்தி| ஒட்டுமொத்த சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை.. வங்கதேச அரசு அதிரடி உத்தரவு!