வினேஷ் போகத் புதிய தலைமுறை
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: வினேஷ் போகத் மனு மீது மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு

Angeshwar G

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் மூன்றாவது முறையாக தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளது.

வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகட், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முன்னதாக நடைபெற்ற விசாரணையில் இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியின் போது அவரின் எடை சரியாக இருந்தது என்றும், இறுதிப் போட்டியின் முன்னதாகதான் எடை கூடியதால், தகுதி நீக்கம் செய்தது தவறு எனவும் அவரது தரப்பில் ஆஜரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார். எனவே, வினேஷ் போகட்க்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.

வினேஷ் போகத்

இச்சூழலில் வினேஷ் போகத் வழக்கில் விளையாட்டு நடுவர் நீதிமன்றம் மூன்றாவது முறையாக தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளது. உலக அளவில் இருக்கும் மல்யுத்த வீரர்கள் எல்லாம் உற்றுநோக்கும் இந்த வழக்கில் மூன்றாவது முறையாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் 16 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்கப்படாது என்றும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. எதற்காக வழக்கு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச மல்யுத்த சங்கம், ஒலிம்பிக் கமிட்டி என மூன்று தரப்பினர் தங்களது வாதத்தை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.