நீரஜ் சோப்ரா, மனு பாக்கர், வினேஷ் போகத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

நீரஜ், மனுபாக்கர், வினேஷ் போகத் - பிராண்ட் மதிப்பு உயர்வு... போட்டிபோடும் நிறுவனங்கள்!

Prakash J

ஒரு நிறுவனத்தைப் பிரபலமாக்குவதில் விளம்பரம் முக்கியப் பங்காற்றுகிறது. அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு, திரை பிரபலங்களோ அல்லது விளையாட்டு வீரர்களோதான் முதல் சாய்ஸாக இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக பல முக்கிய விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஒலிம்பிக்ஸ் வீரர்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் முகங்களாக முன்னிறுத்தப்படுகின்றனர் விளையாட்டு வீரர்கள்.

இதில், தற்போது நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பிராண்ட் வேல்யூ, இந்த வருடம் 50 சதவீதம்வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ள நிலையில், இந்த வருட இறுதிக்குள் 32 முதல் 34 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை நீரஜ் சோப்ரா வசூல் செய்ய இருக்கிறாராம்.

மனு பாக்கர், நீரஜ் சோப்ரா

அதுபோல் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்த மனு பாகரின் மதிப்பும் உயர்ந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக விளம்பரம் ஒன்றில் நடிக்க, மனு பாக்கர் ரூ.25 லட்சம் வாங்கிய நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் அது 6 மடங்கு அதிகரித்துள்ளது. அண்மையில் பிரபல குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான மனு பாக்கர் அதற்கு 1 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தொகை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர, அவரிடம் 40 நிறுவனங்கள் விளம்பரத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டுள்ளன.

இதையும் படிக்க: ஆரம்பித்த ஒரேநாளில் 10 மில்லியன் சந்தாதாரர்கள்.. உலக சாதனை படைத்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்!

அதுபோல், ஒலிம்பிக்கின் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை சென்ற வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது இவரது பிராண்ட் மதிப்பும் கூடியுள்ளது. முன்னதாக விளம்பம் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வரை வாங்கிய வினேஷ், தற்போது ரூ.75 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வினேஷ் போகத்

இந்தியாவில் விளையாட்டு வீரர்களிலேயே அதிக பிராண்ட் மதிப்பை கொண்டவர்களில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!