south korea x page
ஒலிம்பிக்ஸ்

தென்கொரியாவை பெயர் மாற்றி அழைத்த விவகாரம் | மன்னிப்பு கேட்ட ஒலிம்பிக் கமிட்டி!

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் தென்கொரிய வீரர்களை ’வடகொரியர்கள்’ என்று தவறாக அறிமுகப்படுத்தியதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது.

Prakash J

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா, முதல் தங்கத்தை வென்றுள்ளது. தவிர, பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியிலும் சீனாவின் சென், சாங் இணை 337.68 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வசமாக்கியது.

இதன்மூலம், முதல் நாளிலேயே சீனா 2 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்துள்ளது. அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர். ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர். இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் தென்கொரிய வீரர்களை ’வடகொரியர்கள்’ என்று தவறாக அறிமுகப்படுத்தியதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது.

பாரீஸில் நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது, தென்கொரிய வீரர்கள் குழுவினர், பிரெஞ்சு தலைநகரில் உள்ள Seine ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட படகில், தங்களது தேசியக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அவர்களை வடகொரிய வீரர்கள் என்று பொருள்படும் விதத்தில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் அறிமுகப்படுத்தினர். அதாவது, தென்கொரிய வீரர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக ‘வடகொரியர்கள்’ என அறிமுகப்படுத்தியது சர்ச்சையானது. ஏற்கெனவே வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் பனிப்போர் நடைபெற்று வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழு, மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஒலிம்பிக் குழு தனது எக்ஸ் தளத்தில், “தொடக்க விழாவில் தென்கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்கொரிய நாட்டின் கலாசார விளையாட்டுகள் மற்றும் சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ஜாங் மி ரான் இது குறித்து ஒலிம்பிக் குழுவை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒலிம்பிக் 2024| முதல் நாளிலேயே 2 தங்கப் பதக்கத்தைத் தட்டித் தூக்கிய சீனா