வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

“வினேஷ் போகத் இந்த தேசத்தின் கோஹினூர்..” - CAS-ன் முடிவைச் சாடிய இந்திய ஒலிம்பிக் வீரர்கள்!

வினேஷ் போகத்தின் மாமா மஹாவீர் போகத், “அவர் (வினேஷ்) இந்தியா திரும்பும்போது தங்கப் பதக்கம் வென்றவர்போல் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Prakash J

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வினேஷ் போகத்தின் மனுவை எடுத்துக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், மனுமீதான தீர்ப்பினை ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆகஸ்ட் 11) அளிப்பதாக கூறி தள்ளிவைத்தது. பின்னர் ஆகஸ்ட் 11ஆம் தேதி, அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்” என இரண்டாவது முறையாக தள்ளிவைத்தது.

பின் ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த தீர்ப்பு விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மூன்றாவது முறையாக ஒத்திவைத்தது. இந்த நிலையில், வினேஷ் போகத்தின் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 14) வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

வினேஷ் போகத்

மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா, “இதுவரை விரிவான உத்தரவு வரவில்லை. ஏன் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது அல்லது அவர்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று உத்தரவில் அவர்கள் குறிப்பிடவில்லை. நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. விரிவான உத்தரவு 10-15 நாட்களில் வெளியாகும், அதன் பின்பு தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:“6 மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டேன்” - என்ற ஸ்டார்பக்ஸ் CEO பணி நீக்கம்... காரணம் என்ன?

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, “இருள் நேரத்தில் உங்கள் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். உலக அளவில் வைரத்தைப்போல நீங்கள் மின்னுகிறீர்கள். நீங்கள் இந்திய தேசத்தின் கோஹினூர்” என தெரிவித்துள்ளார்.

2008 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், “வெள்ளிப்பதக்கம் எப்போது அறிவிக்கப்படும் என்று நான் காத்திருந்தேன். இப்போது CAS-ன் முடிவு வருத்தமளிக்கிறது. இந்த முடிவில் நான் மகிழ்ச்சியடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வினேஷ் போகத்தின் மாமா மஹாவீர் போகத், “அவர் (வினேஷ்) இந்தியா திரும்பும்போது தங்கப் பதக்கம் வென்றவர்போல் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பினோம். ஆனால், CAS-இன் தீர்ப்பு வெளியான பிறகு அதற்கு வாய்ப்பில்லை என புரிந்தது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்தியா திரும்பும் வினேஷை தங்கப் பதக்கம் வென்றவர்போல் அனைவரும் வரவேற்போம். அவருக்கு நம்பிக்கை கொடுப்போம். 2028 ஒலிம்பிக்கிற்கு சங்கீதா போகத், ரிது போகத் (வினேஷ் போகத் சகோதரிகள்) ஆகியோரையும் தயார் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹரியானா அரசும், வினேஷ் போகத்தை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரைப்போல வரவேற்போம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. மனு தாக்கல் செய்த பெற்றோர்