swapnil kusale - dhoni web
ஒலிம்பிக்ஸ்

‘டிக்கெட் சேகரிப்பவர் to இந்தியாவின் ஹீரோ..’ தோனியை போலவே வாழ்க்கையை கடந்த ஸ்வப்னில் குசலே!

“நான் துப்பாக்கி சுடுதலில் யாரையும் பின்பற்றவில்லை, ஆனால் தோனியிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன். அவரைப்போலவே என்னுடைய விளையாட்டிலும் நிதானத்துடன் இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவரைப்போலவே நானும் ஒரு டிக்கெட் சேகரிப்பாளராக இருந்தேன்”- ஸ்வப்னில் குசலே

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே, 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக மூன்றாவது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும் தன்னுடைய அறிமுக ஒலிம்பிக் போட்டியிலேயே முதல் பதக்கம் மற்றும் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் பிரிவில் முதல் பதக்கத்தையும் வென்று வரலாற்றில் தன்னுடைய பெயரையும் பொருத்திக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்தியா துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் ஒலிம்பிக்கில் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் வீரர்களுக்கு பிறகு 3வது துப்பாக்கி சுடுதல் வீரராக ஸ்வப்னில் குசலே எண்ணிக்கையை 3ஆக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பயணம் குறித்து பேசியிருக்கும் ஸ்வப்னில் குசலே, தன்னுடைய வாழ்க்கையை கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுள்ளார். காரணம், தோனியை போலவே இவரும் ரயில்வேயில் டிக்கெட் சேகரிப்பாளராக இருந்திருக்கிறார்.

டிக்கெட் சேகரிப்பவர் to இந்தியாவின் ஹீரோ..

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஸ்வப்னில், 1995ம் ஆண்டு விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார். 2009-ம் ஆண்டு ஸ்வப்னில்லின் தந்தை, மகாராஷ்டிரா அரசாங்கத்தின் விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதன்மை திட்டமான கிரிதா பிரபோதினி திட்டத்தில் ஸ்வப்னிலை சேர்த்துவிட்டுள்ளார். ஒரு வருட கடின உடல் பயிற்சிக்குப் பிறகு, ஸ்வப்னில் ஒரு விளையாட்டைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது, அப்போது அவர் தேர்ந்தெடுத்த விளையாட்டுதான் துப்பாக்கி சுடுதல்.

Swapnil kusale

தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி வந்த ஸ்வப்னில், 2012 முதல் சர்வதேச போட்டிகளில் இடம்பெற ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு தகுதியான வாய்ப்பும், ஸ்பான்சர்ஷிப்பும் தொடக்கத்தில் எளிதில் கிடைக்கவில்லை. 2012-ல் சர்வதேச போட்டியில் பங்கேற்க ஆரம்பித்த ஸ்வப்னிலுக்கு, முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்தது.

Swapnil kusale

பின்னர் ஒருவழியாக 2013-ல் லக்ஷ்யா ஸ்போர்ட்ஸ் மூலம் அவருக்கு ஸ்பான்சர் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் 2015 முதல் ரயில்வேவில் டிக்கெட் சேகரிப்பாளர் வேலை பார்க்க வேண்டியிருந்தது. மனதில் லட்சியத்துடன் 12 வருடமாக போராடிவந்த ஸ்வப்னில் குசலே, தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவிற்கு பதக்கத்தை தேடித்தந்து பெருமை சேர்த்துள்ளார்.

தோனியிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன்..

அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு தேவையான அடிப்படை பண்புகளாகும். அந்த இரண்டு பண்புகளும் இந்தியாவிற்கு உலகக்கோப்பை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எனும் ஆளுமையின் தனிச்சிறப்பாகும். எனவேதான் ஸ்வப்னில் குசலே தோனியின் வாழ்க்கைக் கதையுடன் தன்னை தொடர்புபடுத்தி கொண்டுள்ளார். உலகக் கோப்பை கேப்டனான தோனி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை பலமுறை பார்த்துள்ளார்.

அனைத்தின்போதும் தோனி எப்படி தனது ஆட்டத்தில் மெதுவாக தொடங்கி பின்னர் இறுதியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்வாரோ, அப்படியேதான் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியிலும் ஸ்வப்னில் குசலேவும் செயல்பட்டார். தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தால் 6வது இடத்தில் இருந்த ஸ்வப்னில், இறுதியில் அற்புதமான கம்பேக் கொடுத்து 451.4 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்து வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றார்.

தோனி குறித்து பேசியிருக்கும் ஸ்வப்னில் குசலே, “நான் துப்பாக்கி சுடுதல் உலகில் குறிப்பிட்ட யாரையும் பின்பற்றவில்லை. அதேநேரம், பிற விளையாட்டு வீரர்களில், தோனியிடமிருந்து நான் மிகவும் உத்வேகம் பெற்றேன். அவர் களத்தில் இருப்பதைப் போல என்னுடைய விளையாட்டிலும் நான் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க விரும்புகிறேன். அவருடைய வாழ்க்கை கதையையும் நான் தொடர்புபடுத்து கொண்டேன். ஏனென்றால் அவரைப் போலவே நானும் ஒரு டிக்கெட் சேகரிப்பாளராக பணியாற்றி உள்ளேன்" என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே இப்படி தெரிவித்திருப்பது தோனி ரசிகர்களை கூடுதலாக குளிர வைத்துள்ளது.!

கடினமான பாதைகளை கடந்துவந்து ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்று பெருமை சேர்த்த ஸ்வப்னில் குசலேவுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சாம்பியன்!