அர்ஷத் நதீம் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு எருமை மாடு பரிசு.. யார் வழங்கியது? சுவாரசியமான பின்னணி!

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற்றது. இந்த ஒலிம்பிக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதையடுத்து, தாயகம் திரும்பிய அவருக்கு வரலாறு காணாத அளவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தவிர, அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பல லட்சங்களை பரிசாக அளித்து வருகின்றன. இந்த நிலையில், அவரது மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்திருப்பது பேசுபொருளாகி வருகிறது.

இதுகுறித்து அர்ஷத் நதீமின் மாமனார் நவாஸ், “எருமை மாட்டை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தனது மருமகன் பற்றிய சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

இதுதொடர்பாக அவர், “அர்ஷத் நதீமுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளை திருமணம் செய்து கொடுத்தேன். அப்போது அவர் சிறிய வேலைகளைச் செய்துவந்தார். மற்ற நேரங்களில் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆர்வம் காரணமாகவே அதை அவர் செய்தார். தனது வீட்டிலும், சுற்றி இருந்த நிலங்களிலும் அவர் பயிற்சி செய்து வந்தார். அர்ஷத் நதீம் தனது கிராமம் மற்றும் ஊரை இத்தனை பெரிய வெற்றிக்குப் பிறகும் விட்டுக் கொடுக்கவில்லை.

அவர் இன்னும் அதே கிராமத்தில்தான் வசிக்கிறார். தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன்தான் வசித்து வருகிறார். அர்ஷத் நதீம் எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார். என்ன இருக்கிறதோ, அதைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் செல்வார். அவரது இரண்டு குழந்தைகள் எங்கள் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். இன்னொரு குழந்தை மிகவும் சிறிய வயதில் இருப்பதால் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அர்ஷத் நதீம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த நவாஸ் என்பவரின் இளைய மகள் ஆயிஷாவைத்தான் அர்ஷத் நதீம் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிக்க: 'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?