Wang Chuqin web
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் பேட்டை உடைத்த Photographer.. மறுதினம் தோற்று வெளியேறிய NO.1 வீரர்!

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் சீனா 16 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Wang Chuqin

இந்நிலையில், நேற்றைய டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான வாங் சுகின் இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. தங்கம் வென்ற சிறிதுநேரத்தில் வாங் சுகினின் டேபிள் டென்னிஸ் பேட் உடைந்ததால் மகிழ்ச்சியான தருணத்திலும் கவலையுடன் தெரிந்தார் வாங் சுகின். இந்நிலையில் பேட் உடைந்த மறுநாளில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற நம்பர் 1 வீரரான வாங் சுகின், 32 குழு போட்டியில் பரிதாபமாக தோற்று ஒலிம்பிக்கிலிருந்தே வெளியேறினார்.

இதையும் படிக்க: IND Olympics: இந்தியாவுக்கா? பிரிட்டிஷ்க்கா? முதல் பதக்கத்தில் எழுந்த சர்ச்சை! யார் அந்த PRITCHARD?

என்ன நடந்தது? எப்படி பேட் உடைந்தது?

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான வாங் சுகின், தன்னுடைய இணையான சன் யிங்ஷாவுடன் இணைந்து பங்கேற்றார். இறுதிப்போட்டியில் வட கொரியா இணையை வீழ்த்தி வாங் சுகின் இணை, தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது.

அப்போது தங்கம் வென்ற மகிழ்ச்சியுடன் தன்னுடைய நாட்டின் கொடியை உயர்த்திய வாங் சுகின், சிறிது நேரம் தன்னுடைய பேட்டை ஓரம் வைத்துவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது வெற்றிபெற்ற இணையை புகைப்படம் எடுக்கவந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவர் தெரியாமல் வாங் சுகினின் பேட்டை காலால் மிதித்து உடைத்தார்.

அதைப்பார்த்து வேதனையடைந்த வாங் சுகின், “என்னுடைய உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் என்னுடைய மற்றொரு பேட்டை வைத்து அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக செயல்படுவேன்” என்று கூறினார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், ஸ்வீடனின் 26-வது தரவரிசையில் உள்ள ட்ரூல்ஸ் மோர்கார்டிடம் 4-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த நம்பர் 1 உலகவீரர் வாங் 32-வது ஒற்றையர் சுற்றிலிருந்து சோக முகத்துடன் வெளியேறினார்.

சில ரசிகர்கள் சில வீடியோ கிளிப்களை பகிர்ந்து, “வேண்டுமென்றே வாங் சுகினின் பேட்டை உடைத்துள்ளார்கள், இதற்கு ஒலிம்பிக் கமிட்டி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.