நீரஜ் சோப்ரா, வினேஷ் போகத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

”பதக்கம் வெல்லவில்லை என்றாலும் வினேஷ் போகத்தை நாம் மறந்துவிடக் கூடாது” - நீரஜ் சோப்ரா ஆதரவுக்குரல்!

நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், இவ்விவகாரம் தொடர்பாக வினேஷ் போகத்திற்கு பலரும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவு அளித்தார்.

இதுகுறித்து அவர், ”வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவருக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கங்களை வென்றால் நம்மை சாம்பியன் என்று அழைப்பார்கள். அதேசமயம், பதக்கம் வெல்லவில்லை என்றால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: 5 பந்திலும் 5 சிக்ஸர்.. ரஷித் கான் ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கிரன் பொல்லார்ட்!