2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து பாரீஸ் சென்ற 117 பேர் கொண்ட குழு 69 பதக்கப்போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிவரும் நிலையில், இதுவரை இந்தியா ஒரு வெள்ளி 4 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவின் பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலங்களும், துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே ஒரு வெண்கலம், இந்திய ஹாக்கி அணி ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் என 5 பதக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெண்கலத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வரும் ஆகஸ்டு 11ம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில், நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கும் மனு பாக்கர் இந்திய கொடியை ஏந்திச்செல்லுவார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், மனு பாக்கருடன் இணைந்து இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்த 2 ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்ல முக்கிய காரணமாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்காக பங்காற்றியதற்காகவும் பெருமை படுத்தும் வகையில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷும் இந்திய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரும் என்னுடைய மகன் மாதிரிதான்!” - இதயங்களை வென்ற நீரஜ் சோப்ராவின் தாய்
ஒலிம்பிக்கில் பொதுவாக உயரடுக்கு பதக்கம் அல்லது அதிக பதக்கங்கள் வென்ற வீரர்கள் அவர்களின் நாட்டை ஒலிம்பிக் நிறைவு விழாவில் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். ஆனால் ஒருமனதாக ஸ்ரீஜேஷ் ஏந்திச்செல்லட்டும் என்ற முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்த நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடமும் கேட்கப்பட்டது. அப்போது நீரஜ் சோப்ராவின் பதிலை கண்ட இந்திய ஒலிம்பிக் சங்கம் நெகிழ்ந்துள்ளது.
ஸ்ரீஜேஷ் இந்திய கொடியை ஏந்திச்செல்வார் என்ற அதிகார அறிவிப்பில் நீரஜ் சோப்ராவின் பதிலையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் பதிவுசெய்துள்ளது. வெள்ளி வென்ற நீரஜ்ஜை தொடர்புகொண்டு பிசி உஷா வாழ்த்தும் போது, “நான் நீரஜ் சோப்ராவிடம் பேசினேன், நிறைவு விழாவில் ஸ்ரீஜேஷ் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய்துள்ளதாக கூறினேன், அப்போது அவராக முன்வந்து அளித்த பதிலையும், அவருடைய கருணை மனதையும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிடி உஷாவிடம் பேசிய நீரஜ் சோப்ரா, ’மேடம், நீங்கள் என்னிடம் கேட்காவிட்டாலும், நான் ஸ்ரீபாயின் பெயரைப் பரிந்துரைத்திருப்பேன்’ என்று சொன்னார். ஸ்ரீஜேஷ் மீது நீரஜ் கொண்டுள்ள அபரிமிதமான மரியாதை மற்றும் இந்திய விளையாட்டுக்காக அவர் கொண்டிருக்கும் பங்களிப்பை இது பிரதிபலிக்கிறது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.
நீரஜ் சோப்ரா ஒரு சுயநலமற்ற வீரர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.