நீரஜ் சோப்ரா முகநூல்
ஒலிம்பிக்ஸ்

'தங்க மகன்’ நீரஜ் சோப்ரா களமிறங்க தயார்! ஈட்டி எறிதலில் இந்த முறையும் பதக்கத்தை தட்டி செல்வாரா?

அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று, ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்று பிற்பகல் 1.50 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்று பிற்பகல் 1.50 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டிக்கான எதிர்ப்பார்ப்பு எகிரியதற்கான காரணம், 121 ஆண்டு கால இந்தியாவின் கனவை நிறைவேற்றிய, ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா களமிறங்கும் போட்டிதான் இது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தவகையில், ஒலிம்பிக் போட்டியின் 11 ஆம் நாளான இன்று, பெரும்பாலான மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஈட்டி எரிதலுக்கான போட்டி நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைப்பெறும் ஈட்டி எறிதல் போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்கின்றனர்.

இரண்டு குழுக்கள்:

முதல் கட்டமாக நடைப்பெறும் தகுதி சுற்றில் ஏ மற்றும் பி என இரண்டு குழுக்காளாக வீரர்கள் பங்கேற்பார்கள்.

இதில் தகுதி பெற வேண்டும் எனில், ஒரு வீரர் 84மீ தூரம் எறிய வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும், 6 முறை வாய்ப்பு வழங்கப்படும். அதில், எது சிறந்ததோ, அதனை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். முதல் 12 இடங்களை பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குழு ஏ பங்கேற்கும் ஈட்டி எறிதலுக்கான முதல் தகுதிச் சுற்றுப்போட்டியானது மதியம் 1.50 மணிக்கும், குழு பி இடம் பெறும் 2 ஆவது தகுதிச்சுற்று போட்டியானது பிற்பகல் 3.20க்கும் நடைபெறும். குறிப்பாக இந்த பி குழுவில்தான் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இடம்பெற்று இருக்கிறார்.

இதில் தகுதி பெறுபவர்கள் ஆடவருக்கான ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை இவர் செய்த சாதனை என்ன?

2020 ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் நீரஞ் சோப்ரா. இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார். இவர் எறிந்த ஈட்டின் தூரம் 87.58மீ என்பதாகும். இந்தவகையில், இந்த ஆண்டும் இவர் தங்கப்பதக்கம் வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அந்தவகையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போடியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் அனைவருக்கும் இலவச வீசா வழங்கப்படும் என்று அமெரிக்க விசா விண்ணப்ப தளமான அட்லிஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.