2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் மட்டும் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் முக்கியமான சுற்றில் பதக்கத்தை வெல்ல முடியாமல் போராடி வெளியேறிய நிலையில், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மட்டுமே இந்தியாவின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளனர்.
முதலில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார், அவரைத்தொடர்ந்து மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரரான ஸ்வப்னில் குசலே, 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.
இந்நிலையில் இந்தியாவின் தடகள வீரர்கள் தற்போதுதான் தங்களது போட்டிகளையே தொடங்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து அதிகப்படியாக 29 பேர் கொண்ட தடகள குழுதான் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள நிலையில், பதக்க எண்ணிக்கை உயரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருக்கிறது. அதனை மெய்பிக்கும் விதமாக முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் இடைவெளியை பதிவுசெய்த நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
நிகத் ஜரீன், பிவி சிந்து, லக்ஷயா சென், சிராக்-சாத்விக் இணை என முக்கியமான வீரர்கள் பதக்கத்தை தவறவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு அனைத்தும் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் மீதே இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், குரூப் பி பிரிவில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் இடைவெளியை பதிவுசெய்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக தகுதி மீட்டர் 84ஆக இருந்தநிலையில், பிரிவில் அதிகபட்ச இடைவெளியை பதிவுசெய்து அசத்தினார் நீரஜ் சோப்ரா.
அவரைத்தொடர்ந்து அந்த பிரிவில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 90 மீட்டர் தூரத்தை எட்டிய பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் 86.59 மீட்டர் பதிவுசெய்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த இரண்டு வீரர்கள் கலக்கிய நிலையில், மற்றொரு போட்டியாளரான கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ், பாகிஸ்தானின் அர்ஷத் நதீமின் எறிதலை முறியடித்து தனது முதல் முயற்சியிலேயே 88.63 மீ தூரத்தை பதிவு செய்து அனைவரையும் கவர்ந்தார். முதல் 3 இடங்களை நீரஜ் சோப்ரா, ஆண்டர்சன் பீட்டர்ஸ், அர்ஷத் நதீம் 3 வீரர்களும் குருப் பி-விலிருந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
குரூப் A-ல் இடம்பிடித்த மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறினார்.