மனுபாக்கர், நீரஜ் சோப்ரா, சுமேதா பாக்கர் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனுபாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில், இந்தியா 1 வெள்ளி 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் இரண்டு வெண்கல பதக்கங்களை வேட்டையாடியவர் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கர். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதுபோல் நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வேட்டியாடி இருந்தார்.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் அவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல், மனுபாக்கரின் தாயார் சுமேதா பாக்கரும் நீரஜ் சோப்ராவும் மற்றொரு காணொளி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், அவர்கள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (ஹரியானா) என்பதால் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: 'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?

இந்த வீடியோக்களை வைத்து, ”தனது மகளுக்கு சுமேதா பாக்கர் வரன் பார்க்கிறார்போல” எனவும், ”ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரை பேசி முடிக்க முயற்சி செய்கிறார்” எனவும் ”இந்திய அம்மா தனது மகளின் திருமணத்தைப் பற்றி வெற்றிகரமான பையனிடம் பேசுகிறார்” எனவும் நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை எனவும் சிலர் சுட்டிக் காட்டி வருகின்றனர். “நிறைவு விழாவில் மனு பாக்கர் அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளுடனும் பேசிக் கொண்டுதான் இருந்தார். எனவே, அதை வைத்து கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம். இந்தியாவில் ஓர் ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசினால் காதல், திருமணம் என பேசும் வழக்கம் இருக்கிறது" எனச் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்து, கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் உடன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில், தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி 2வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

இதையும் படிக்க: தகுதிநீக்க விவகாரம்|எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்.. நீதிமன்றத்தில் வினேஷ்போகத் தரப்பு கூறியது என்ன?