பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முகநூல்
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிநாள்|இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தவுள்ள மனுபாக்கர், ஸ்ரீஜேஷ்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று நள்ளிரவு நிறைவு விழா நடக்கிறது.

PT WEB

செய்தியாளர் - ஆண்டோ எம். தாம்சன்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று நள்ளிரவு நிறைவு விழா நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் மனுபாக்கர் மற்றும் ஸ்ரீஜேஷ் அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா நிறைவு பகுதியை எட்டியுள்ளது. செய்ன் நதிக்கரையில் தொடங்கிய ஒலிம்பிக்ஸ் திருவிழா, அந்நாட்டின் தேசிய மைதானத்தில் நிறைவடைகிறது. 32 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கள் நாட்டிற்காக பதக்கங்களை குவித்தனர்.

பதக்கப் பட்டியலில் 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், ஜப்பான் நான்காவது இடத்திலும், போட்டியை நடத்தும் பிரான்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில் 6 பதக்கங்களுடன் இந்தியா 70வது இடத்தில் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் 3 வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம், மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது. தனிநபர் பிரிவில் துப்பாக்கிச்சுடுதலில் மனுபாக்கர், ஸ்வப்னில் குசாலே வெண்கலமும், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளியும், மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலமும் வென்றனர். இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும், குரூப் பிரிவில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒரு வெண்கலமும் வென்றது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில், இன்று நள்ளிரவு நிறைவு விழா நடக்கிறது. ஸ்டேட் டி பிரான்ஸ் பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிறைவு விழாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் பங்கேற்ற நாடுகளின் அணிவகுப்புடன் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் தொடர் நிறைவு பெறுகிறது.

அணிவகுப்பில் இந்தியா சார்பில் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்கின்றனர். விழாவின் இறுதியில் அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குழுவிடம் அதிகாரப்பூர்வ கொடி வழங்கப்படும்.