manika batra - manu bakher x
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் இன்று IND: 3வது பதக்கத்தை தேடும் மனு பாக்கர்! டேபிள் டென்னிஸ்ஸில் வரலாறு படைத்த மணிகா!

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.

துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது. அந்தவகையில் இன்றைய 4வது நாள் முடிவில் அடுத்த பதக்கத்திற்கான தேடலில் முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்..

இன்றைய நாள் முடிவில் இந்திய வீரர்கள்:

3வது பதக்கத்தை குறிவைக்கும் மனு பாக்கர்:

பாரிஸ் ஒலிம்பிக் தொடர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற மனு பாக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தன் இணையான அர்ஜுன் சரப்ஜோட் உடன் இணைந்து தன்னுடைய இரண்டாவது பதக்கத்தை வென்றெடுத்தார். காலிறுதியில் வென்று வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்ற மனுபாக்கர், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற இமாலய சாதனையை படைத்தார்.

இன்னும் அவருக்கு 25மீ ஏர் பிஸ்டல் சுற்று மீதமிருக்கும் நிலையில், 3வது பதக்கத்தை வெல்வதற்கான முனைப்பில் மனு பாக்கர் இருந்துவருகிறார். அதைமட்டும் செய்துவிட்டால் ஒரே ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சம்பவத்தை மனு பாக்கர் படைப்பார்.

டேபிள் டென்னிஸில் வரலாறு படைத்த மணிகா:

32 வீரர்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, பிரான்சின் பிரிதிகா பவாடேவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) பிரிதிகாவை வீழ்த்திய மணிகா பத்ரா 16வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதன் மூலம், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 16வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை மணிகா பத்ரா பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற பஜன் கவுர்:

வில்வித்தை தனிநபர் 32வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பஜன் கவுர் 6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி, 16வது சுற்றுக்கு தகுதிபெறுள்ளார்.

கடைசி சுற்று போட்டியில் சம்பவம் செய்த சாத்விக்-சிராக்:

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை, தங்களுடைய கடைசி குழு போட்டியில் இந்தோனேசிய ஜோடி ஃபஜர் அல்பியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை நேர் செட்களில் வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து கலக்கிவரும் ஹாக்கி அணி:

ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் முதல் இரண்டு குவர்டர்களில் அதிக அளவிலான பெனால்டி கார்னர்களை வென்றனர். இதனை பயன்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் 2 கோல்களை அடித்து அசத்தினார்.

தோல்வி:

*மகளிருக்கான வில்வித்தை தனி பிரிவு போட்டியில் ANKITA BHAKAT போலந்து நாட்டின் WIOLETA MYSZOR யிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.

*ஆண்களுக்கான துடுப்பு படகு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் 5வது இடம் பிடித்த தோல்வி அடைந்தார்.

*ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் தமிழகத்தை சார்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் 21வது இடம் பிடித்து முதல் சுற்றில் வெளியேறினார்.