மனு பாக்கர், நீரஜ் சோப்ரா எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

நீரஜ் சோப்ராவுடன் திருமணம் என பரவிய வதந்தி... மவுனம் கலைத்த மனு பாக்கர்!

மனு பாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா குறித்து பரவிய திருமண வதந்தி தொடர்பாக மனு பாக்கரே பதில் அளித்துள்ளார்.

Prakash J

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில், முதல் இரண்டு வெண்கல பதக்கங்களை வேட்டையாடியவர் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கர். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதுபோல் நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வேட்டையாடி இருந்தார்.

நீரஜ் சோப்ரா, மனு பாக்கர்

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் அவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மற்றொரு வீடியோவில், மனுபாக்கரின் தாயார் சுமேதா பாக்கரும் நீரஜ் சோப்ராவும் பேசியதும் வைரலாகியது. இதைவைத்து நெட்டிசன்கள் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என தவறான தகவல்களைப் பரப்பினர்.

இந்தச் செய்தி வைரலாக பரவிய நிலையில், அதற்கு மனு பாக்கரின் தந்தை மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “மனுபாக்கர் இன்னும் சின்ன பொண்ணுதான். அவருக்கு இன்னும் திருமண வயதுகூட ஆகவில்லை. ஆகையால், நான் இப்போது அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. மேலும், மனுபாக்கரின் தாய் சுமேதா பாக்கர், நீரஜை தன் மகனைப்போலவே கருதுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

அதுபோல நீரஜ் சோப்ராவின் மாமாவும், “நீரஜ் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டுவந்தது எப்படி நாட்டிற்கு தெரிய வந்ததோ, அதேபோல அவர் திருமணம் செய்துகொள்வதும் உலகத்திற்கு தெரியவரும்” எனத் தெரிவித்திருந்தார்.

மனு பாக்கர்

இந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது மனு பாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது நடைபெற்றபோது நான் அங்கு இல்லை. ஆனால் 2018-இல் இருந்தே விளையாட்டு நிகழ்ச்சியின்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம். இருப்பினும் நாங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொண்டது கிடையாது. இந்த தொடரின்போதுகூட நாங்கள் கொஞ்சமாகத்தான் பேசிக்கொண்டோம். ஆகவே வைரலாகும் வீடியோ வதந்தி மட்டுமே. அதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் இந்த தேசத்தின் கோஹினூர்..” - CAS-ன் முடிவைச் சாடிய இந்திய ஒலிம்பிக் வீரர்கள்!