manu bhaker web
ஒலிம்பிக்ஸ்

‘ஹாட்ரிக் பதக்கம் கிடைக்குமா?..’ 25மீ துப்பாக்கி சுடுதலில் பைனலுக்கு முன்னேறிய மனு பாக்கர்!

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.

மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் முக்கியமான சுற்றில் பதக்கத்தை வெல்ல முடியாமல் போராடிவரும் நிலையில், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

முதலில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். இதன்மூலம் இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

மனு பாக்கர்

அவரைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரரான ஸ்வப்னில் குசலே, 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் கடைசி தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்ற மனு பாக்கர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

புயல் வேகத்தில் துளைத்த மனு பாக்கர்..

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் தனது இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கடைசி தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்ற அவர், ஹங்கேரியின் வெரோனிகா மேஜருக்குப் பின்னால் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து பிரம்மிக்க வைத்தார். 2 பதக்கங்களை வென்ற பிறகு எப்படியான பாசிட்டிவ் எனர்ஜி வரும் என்பதை களத்தில் வெளிக்கொண்டுவந்த மனு பாக்கர், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்/பெண் இரண்டு பட்டியலையும் சேர்த்து 3 பதக்கங்களை வெல்லும் முதல் வீராங்கனை மற்றும் இந்தியாவிற்கு 3 பதக்கங்களை வெல்லும் முதல் வீராங்கனை என்ற இமாலய சாதனையை நிகழ்த்த உள்ளார்.

இதுவரை ஒரு வீரர் 2 பதக்கங்களை வென்றதே அதிகப்படியான பதங்களாக இருந்துவருகிறது. மனு பாக்கர் பங்கேற்கும் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டியானது நாளை மதியம் 1PM மணிக்கு நடைபெறவிருக்கிறது.