மன்சுக் மாண்டவியா, வினேஷ் போகத் pt web
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் | “இந்தியா கடும் எதிர்ப்பு” - மக்களவையில் மன்சுக் மாண்டவியா விளக்கம்

ஒலிம்பிக் மல்யுத்தம் 50கி எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மன்சுக் மாண்டவியா இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

Angeshwar G

வினேஷ் போகத் தகுதி நீக்கம்

50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற சோதனையில் சரியான எடையில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கியூபாவின் குஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்தார்.

வினேஷ் போகத்

வினேஷ் போகத்திற்கு ஆதரவாக தேசம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வினேஷ் போகத்தால் தேசம் பெருமையடைவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இளம் தலைமுறையினருக்கு வினேஷ் போகத் உந்து சக்தியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

”முழுநாடும் உங்களுடன் இருக்கிறது” ராகுல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக கூறுகையில், “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.

திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

வீழ்த்த முடியாத வீராங்கனை

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “வினேஷ் போகத்தின் எடை 100 கி கூடுதலாக இருந்தது. இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக இருந்தார் வினேஷ் போகத். அவரது தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். வினேஷ் போகத்துக்கு சிறந்த பயிற்சியாளரை கொடுத்து இருக்கிறோம், அவருக்கு தேவையான நிதியுதவி வழங்கியிருக்கிறோம்; தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி உதவி மற்றும் வசதிகள் செய்து தரப்படும்” என தெரிவித்தார்.