நீரஜ் சோப்ரா file
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | சாதனை நாயகன் நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை!

பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது தோள்வலிமையால் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய வரலாற்றை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. எளிய விவசாய குடும்பத்தில் இருந்து உருவாகி, ஒலிம்பிக் அரங்கில் தேசியக் கொடியை உயரப்பறக்க வைத்திருக்கும் நீரஜ் பயணத்தை பார்க்கலாம்.

webteam

தங்க மகன் நீரஜ் சோப்ரா:

வெற்றி ஒருநாளில் வந்துவிடாது. தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒருநாள் வரும்.

- இந்த நம்பிக்கை வார்த்தைகள் நீரஜ் சோப்ரா கூறியவை.

உலக சாம்பியன், காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற தங்க மகன் என பெருமைகள் இருந்தாலும் அதனை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல், எளிய மனிதராகவே இருக்கும் நீரஜ், இன்றைய தடகள உலகில் ஒளிரும் சூரியனாக அனைவருக்கும் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறார். தடகளம் கடந்து அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிப்பவராகவும், நம்பிக்கை அளிப்பவராகவும், அவர்களுக்காக குரல் கொடுப்பவருமாக இருப்பவர் நீரஜ்.

vinesh phogat

டெல்லியில் சாக்ஷி, வினேஷ் உள்ளிட்டோர் மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷனை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்காக விளையாட்டு உலகில் இருந்து வந்த வலிமையான குரல் நீரஜ் சோப்ராவினுடையது. இப்போதும் வினேஷ் போகத் முதல்சுற்றில் நடப்புச் சாம்பியனை வீழ்த்தியபோது, “வினேஷின் வெற்றி அசாத்தியமானது. மிகவும் முக்கியமானது” என்று கூறியிருந்தார்.

உடல் எடையை குறைப்பதற்காகவே விளையாடச் சென்ற நீரஜ் சோப்ரா:

ஹரியானா மாநிலத்தில் கந்த்ரா என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த நீரஜ். விளையாட்டுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது. 11 வயதில் 90 கிலோ எடையுடன் பருமனாக இருந்த நீரஜ் சோப்ராவை எப்படியாவது எடை குறைக்க வைக்கவேண்டும். இதுதான் அவரின் பெற்றோரின் நோக்கம். அதற்காக முதலில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு அனுப்பினார்கள். ஆனால், நீரஜ்ஜிற்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஒருமுறை அவரது தந்தை சதீஷ்குமார், மைதானத்திற்கு அழைத்துச் சென்றபோது ஈட்டி எறிதலைப் பார்த்ததுமே அதில் ஈர்ப்பு ஏற்பட்டது.

Neeraj chopra

பெரிய குடும்பத்தில் பிறந்த சிறிய குழந்தை:

பெரிய காரணம் ஒன்றுமில்லை. ஈட்டி எறிதலில் அதிகம் ஓட வேண்டாம் என்பதுதான் முதல் காரணமாக இருந்தது. இதனால் ஈட்டி எறிதல் பயிற்சியைத் தொடங்கினார். போகப்போக ஈட்டி எறிதலே தனக்கான களம் என்று உணர்ந்தார் நீரஜ். நீரஜ்ஜின் தந்தை சதீஷ்குமார் சாதாரண விவசாயி. பெரிய கூட்டுக் குடும்பம் இவருடையது. மொத்தம் 19 பேர் கொண்ட குடும்பத்திற்கு சதீஷ்குமாரின் வருமானம்தான் முக்கியமானதாக இருந்தது. இதில் நீரஜ்ஜின் ஈட்டி எறிதல் பயிற்சிக்கான செலவுகளும் சேர்ந்து கொண்டன. இதனால் தந்தையின் உழைப்பு கடினமாகியது.

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா:

2016 ல் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பிரிவில் 86.48 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். 2017 ல் விளையாட்டு ஒதுக்கீட்டில் நீரஜ்ஜிற்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்திற்குப் பிறகுதான் நீரஜ் குடும்பத்தின் பொருளாதார சுமை குறையத் தொடங்கியது. பின்னரே குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் நீரஜ் விளையாட்டில் கவனம் செலுத்தினார். ஸ்பான்சர்களின் ஆதரவால் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்ற நீரஜ், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

neeraj chopra

வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வென்று சாதனை படைத்தார். நடப்பு உலகச் சாம்பியனாகவும், ஒலிம்பிக்கில் நடப்பு சாம்பியனாகவும் பாரிஸில் களமிறங்கிய நீரஜ், தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தோள்வலிமையால் வியக்க வைத்திருக்கிறார் நீரஜ், இப்போது இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்து தனது மகுடத்தில் இன்னொரு வைரத்தை பதித்துக் கொண்டார். விளையாட்டு உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும், எளிய மனிதர்களின் நாயகனாக, அசாத்திய திறமை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக வானுயர்ந்து நிற்கிறார் நீரஜ் சோப்ரா...