அர்ச்சனா காமத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திரம், 24 வயதில் ஓய்வு அறிவிப்பு... காரணம் சொன்ன அர்ச்சனா காமத்!

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான அர்ச்சனா காமத், விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர்.

இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர். இந்த நிலையில், இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனையான அர்ச்சனா காமத், விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகிய மூவரும் கவனம் ஈர்த்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்தனர். அணியாகவும் இந்த மூன்று வீராங்கனைகளும் ஒன்றிணைந்து காலிறுதி சுற்று வரை முன்னேறி சாதித்தனர். காலிறுதிப் போட்டியில் இந்திய அணியில் அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றிபெற்றிருந்தார். இதனால் வரும்காலங்களில் அர்ச்சனா காமத், டேபிள் டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவார் எனப் பேசப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக அர்ச்சனா விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ஆனால் அர்ச்சனா காமத் தன் பயிற்சியாளர் கார்க் உடன் நீண்ட ஆலோசனையை மேற்கொண்ட பிறகே, இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ச்சனா காமத், “எனது சகோதரர் நாசாவில் பணியாற்றி வருகிறார். அவர்தான் எனது ரோல் மாடல். படிப்பை தொடரப் போகிறேன் என்று கூறியபோதும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் என் படிப்பை நல்லபடியாக முடிக்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆரம்பித்த ஒரேநாளில் 10 மில்லியன் சந்தாதாரர்கள்.. உலக சாதனை படைத்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்!

அமெரிக்காவில் பொருளாதார தொடர்புடைய படிப்பை அர்ச்சனா காமத் படிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வளர்ந்துவரும் வீரர்களுக்கு டேபிள் டென்னிஸில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று அவரின் பயிற்சியாளர் கார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதாரரீதியாக உதவிகள் கிடைக்கும். எனவே பொருளாதாரரீதியாகவும் பலன்கள் இல்லாத நிலையில்தான் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகளின் இந்த முடிவு குறித்து அர்ச்சனா காமத்தின் தந்தை கிரிஷ் காமத், “15 ஆண்டுகளுக்கும் மேலாக டேபிள் டென்னிஸை ஆர்வத்துடன் விளையாடியதால், தற்போது ஒலிம்பிக்கில் இந்த அளவுக்கு அவரால் உயர முடிந்தது. தற்போது, அவரது விருப்பமான படிப்பைத் தொடர வேண்டும் என அவர் எண்ணியுள்ளார். விளையாட்டுக்காகவும் நாட்டிற்காகவும் தன்னால் முடிந்ததைச் செய்த பிறகு, இந்த கடினமான முடிவை அவர் எடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

தேசிய டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான மாசிமோ கோஸ்டான்டினி, ”இந்தியா தனது சிறந்த டேபிள் டென்னிஸ் திறமையாளர்களில் ஒருவரை இழந்துள்ளது. அவர், எப்போதும் கல்வியாளர்களைப் பற்றியே நினைப்பதை நான் அறிந்தேன். இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அதனால் அவருடைய முடிவையும் நான் புரிந்துகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!