ஸ்ரீஜேஷ் pt web
ஒலிம்பிக்ஸ்

‘எதுவா இருந்தாலும் என்னை தாண்டித்தான்..’ அசராத காப்பான்.. ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கதை!

Angeshwar G

காப்பான்

“பாகுபலி, பாகுபலி” என மகிழ்மதி தேசத்தின் ஒட்டுமொத்த படைகளும், மக்களும் அமரேந்திர பாகுபலி தளபதியாக பொறுப்பேற்கும்போது தங்களது இன்பத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் தற்போது இந்தியாவும் ஸ்ரீஜேஷின் பெயரை இதயத்தில் ஏந்தி இருக்கிறது.

ஹாக்கி என்பது இந்தியாவில் புகழ் பெற்ற விளையாட்டுதான். ஆனால், கலை சினிமாவிற்கும் கமர்ஷியல் சினிமாவிற்கும் உள்ள வேறுபாடுதான் கிரிக்கெட்டுக்கும் பிற விளையாட்டுகளுக்கும். ஆனால், கேரளாவில் கிரிக்கெட்டையும் தாண்டி கால்பந்து மற்றும் வாலிபால் மீது இருக்கும் மோகம் என்பது ஹாக்கியை ஒப்பிடும்போது அதிகம். அந்த மண்ணில் பிறந்த ஸ்ரீஜேஷ்தான் இந்தியாவின் ஹாக்கி கோல் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு, தேசத்தையே தனது பெயரை உச்சரிக்க வைத்துள்ளார்.

ஸ்ரீஜேஷ்

36 வயதான ஸ்ரீஜேஷ் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியவர். பல காமன்வெல்த் போட்டிகள், உலகக்கோப்பைகள் என 328 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ள மூத்த வீரர். தற்போது நான்காவது ஒலிம்பிக்கில் விளையாடும் இவரும், இந்திய ஹாக்கி அணி வீரர்களும் தங்கத்தை வெல்வார்களா என்பதுதான் ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பு.

முதல் ஹாக்கி கிட்

மே 8, 1986 ஆம் ஆண்டு கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் கீழக்கம்பலம் எனும் கிராமத்தில் பிறந்தவர். அந்த கிராமத்தில் இருந்த குழந்தைகளுக்கு தடகளம், ஃபுட்பால் மற்றும் வாலிபாலில்தான் மோகம். அது ஸ்ரீஜேஷ்-க்கும் இருந்தது. முதலில் ஓட்டப்பந்தயத்தில்தான் தனது விளையாட்டு வாழ்க்கையை அவர் தொடங்கினார். தனது 12 ஆவது வயதில் தனது வீட்டில் இருந்து 200 கிமீ தொலைவில், திருவணந்தபுரத்தில் உள்ள சி.வி.ராஜா விளையாட்டுப் பள்ளியில், ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற்றார். ஆனால், ஸ்ரீஜேஷின் பயிற்சியாளர் தடகளப் போட்டிகளில் அவரது திறமை முன்னேறாததைக் கண்டு, கோல் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ள ஊக்குவித்தார்.

கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்

ஹாக்கி விளையாடுவது குறித்து தான் எடுத்த முடிவு சரிதான் என்பதை பெற்றோருக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உணர்த்த ஸ்ரீஜேஷ் மிக பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஏனெனில், ஹாக்கி விளையாட அவரது பெற்றோர்களேவும் அவரை எதிர்த்துள்ளனர். அவரது உறவினர்கள் கூட, ‘ஹாக்கி விளையாடினால் அரசுத்துறைகளில் வேலை கிடைக்காது’ என தெரிவித்துள்ளனர். ஆனாலும் கூட தனது முடிவில் உறுதியாக இருந்தார் ஸ்ரீஜேஷ் முதலில் பெற்றோரை சமாதானம் செய்துள்ளார். இதனால் அவரது தந்தை தன்னிடம் இருந்த பசுமாட்டை விற்று ஸ்ரீஜேஷ்க்கான முதல் ஹாக்கி கிட்டை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பியன் ஸ்ரீஜேஷ் சாலை

2004ல் ஜூனியர் தேசிய அணியில் அறிமுகமானார்ஸ்ரீஜேஷ். பின் 2006 ஆம் ஆண்டு கொழும்புவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தேசிய அணிக்காக இடம்பிடித்தார். அப்போது அணியின் மூத்த கோல் கீப்பர்களாக இருந்தவர்களுடன் அனுபவத்தைப் பெற்றார். அவரது செயல்திறனும் சிறப்பாக இருந்தது.

சீனியர் வீரர்கள் இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகளுக்கு காத்திருக்க வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு... 2009-ல் கோல் கீப்பர் பல்ஜித் சிங்கின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீஜேஷ் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை, கிளவுஸ் மாட்டிய தனது இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர், அதன் பிறகு இந்தியாவின் முதன்மை தேர்வாகிப் போனார். பின் இந்தியாவின் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக மாறினார்.

2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. அந்தத் தொடர் முழுவதும் ஸ்ரீஜேஷ் நட்சத்திர வீரராக இருந்தார். அதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு பெனால்டிகளை தடுத்து தேசத்தின் ஹீரோவாக மாறினார் ஸ்ரீஜேஷ். இத்தகைய சூழலில்தான், கீழக்கம்பலத்தில் உள்ள ஸ்ரீஜேஷின் வீட்டைக் கடந்து செல்லும் சாலைக்கு, 'ஒலிம்பியன் ஸ்ரீஜேஷ் சாலை' என பெயரிட்டு கௌரவித்தது கேரள அரசு.

ஒலிம்பிக் பதக்கமே ஆதர்சம்

8 வருடங்கள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த சர்தாரா சிங் 2016 ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்து விலக, இந்திய ஹாக்கி அணிக்கு கேப்னாக நியமனம் செய்யப்பட்டார் பி.ஆர். ஸ்ரீஜேஷ். இவரது தலைமையில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

2015 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதையும், 2017 பத்மஸ்ரீ விருதினையும் பெற்றார். 2021, 2022ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல்கீப்பருக்கான விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது சர்வதேச ஹாக்கி சம்மேளனம். இந்தியாவின் மிக உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னாவும், ஹாக்கி நாயகனின் கைகளில் தவழ்ந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக அவர் கருதுவது 2021ஆம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் ஏந்தியதைத்தான்.

150 கிமீ வேகத்தில் பந்து வந்தாலும் கவலையில்லை

அதன்படி 2021 ஒலிம்பிக்கில், ஹாக்கியில் 3ஆம் இடத்திற்கான போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்தது இந்தியா. அந்த போட்டியில் தன் பக்கம் வரும் பந்துகளை அநாயசியமாக தடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் இந்தியாவின் இந்த எல்லைக் காப்பான். அவர் வெற்றிக் களிப்பில் கோல் கம்பத்தின் மீது ஏறி கம்பீகரமாக போஸ் கொடுத்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீஜேஷ்

150 கிமீ வேகத்தில் பந்து வந்தாலும் அதை அசத்தலாக தடுக்கக்கூடிய கோல் கீப்பர்.. அவரது அனுபவம், எதிரில் பந்தைக் கொண்டு வரும் வீரர் எப்போது, எந்த திசையில் பந்தை அடிப்பார் என்பதை துல்லியமாக கணிக்கும் திறனை வழங்கியுள்ளது.

ஸ்ரீஜேஷின் மனைவி ஆயுர்வேத மருத்துவர் என்பதால் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நகைச்சுவையாக அவரே குறிப்பிடுகிறார். அவரது மனைவியின் ஆலோசனையின் படி தனது உணவு முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டதும், தனது ஆட்டத்தை அப்படியே தொடர பலவகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் அவரது ஃபிட்னெஸ்க்கு காரணம்.

பதக்கத்துடன் விடைபெற வேண்டும்

மணிமகுடங்கள் தரித்த தனது 18 ஆண்டுகால ஹாக்கி வாழ்க்கை, நடப்பாண்டு ஒலிம்பிக் தொடருடன் முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார் ஸ்ரீஜேஷ். தனக்காக பல தியாகங்களை செய்த தனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது எனக் கூறிய அவர், ஹாக்கியை வளர்க்க அடிமட்ட அளவில் இருந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என புன்முறுவல் பூத்தார்.

கடைசியாக ஒருமுறை பாரிஸ் ஒலிம்பிக்கில் களம் காணவுள்ள இந்திய ஹாக்கியின் ஜாம்பவானை, தங்கப் பதக்கத்துடன் வழியனுப்புவோம் என இந்திய அணியினரும் சூளுரைத்துள்ளனர். இந்திய அணியை அரண்போல் காத்த ஜாம்பவான் ஸ்ரீஜேஷ், சாதனைப் பதக்கத்துடன் விடைபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.