மேரி கோம், வினேஷ் போகத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

தகுதிநீக்க அச்சம் |அன்று 4 மணி நேரத்தில் குறைத்த 2 கிலோ எடை! 2018-ல் மேரி கோம்-க்கு நடந்தது என்ன?

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வினேஷ் போகத்

வினேஷ் போகத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், வினேஷுக்கு ஆதரவாகவே பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர், ”வினேஷ் போகத் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர். விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கும் போது, ​​வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலோ, “வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 4 மணி நேரத்தில் 2 கிலோ எடையைக் குறைத்ததாக இந்திய குத்துச்சண்டை முன்னாள் வீராங்கனை மேரி கோம் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

இதுகுறித்து அந்தப் பேட்டியில், ”கடந்த 2018ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை இறுதிப்போட்டியின்போது, நான் போட்டியிடும் பிரிவில் 48 கிலோவுக்கு மேல் 2 கிலோ கூடுதலாக இருந்தேன். இதனால் எனக்கும் தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் இருந்தது. ஆனால், நான் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்து எடையைக் குறைத்து போட்டிக்குத் தயாரானேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 முறை சாம்பியனான மேரிகோம், 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் வெண்கலப் பதக்கத்தை வேட்டியாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: எதிராளியை விரட்ட செஸ் போர்டில் விஷம் தெளிப்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி! சிக்கலில் வீராங்கனை #Video