ஹோகாடோ செமா எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

நாட்டுக்காக ஒற்றைக் காலை இழந்த ராணுவ வீரர்.. பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை!

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் எஃப்57 பிரிவில் பங்கேற்ற 40 வயதான ஹோகாடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Prakash J

17-வது பாராலிம்பிக் போட்டிகள், பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

கடந்தமுறை இந்தியா 19 பதக்கங்களை வென்ற நிலையில், இந்தமுறை அதைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்தியா இந்தத் தொடரில் இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் உட்பட 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிக்க; மணிப்பூர்: மீண்டும் வெடித்த வன்முறை.. 5 பேர் பலி!

இதில் பாரிஸில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் எஃப்57 பிரிவில் பங்கேற்ற 40 வயதான ஹோகாடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இது அவரது அதிகபட்ச சாதனையாகும். இதற்குமுன்பு 13.88 மீட்டர் தூரம் குண்டு எறிந்து கடந்தாண்டு அவர் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாகலாந்து மாநிலம் திமாபூரைச் சேர்ந்த ஹோகாடோ செமா, கடந்த 2002ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது கண்ணிவெடி வெடித்து தனது இடதுகாலை இழந்தார். என்றாலும் தன்னம்பிக்கையை இழக்காத அவர், தனது முதல் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று அதில் பதக்கம் வென்று இருக்கிறார். ஹோகாடோ செமா வென்ற வெண்கலம் இந்தியாவின் 27வது பாராலிம்பிக் பதக்கம் ஆகும். இன்னும் ஒருநாள் (செப்.8) மீதமுள்ள நிலையில் இந்தியா மேலும் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க; கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்