2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது.
அந்தவகையில் 2022 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் லக்சயா சென், நடப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தன்னுடைய முதல் ஒலிம்பிக் பதக்கத்தை கொண்டுவரும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் ’எல்’ குழுவின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. பகல் 1.40 மணிக்கு நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், உலக தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் இந்தோனேசியா நாட்டின் JONATHAN CHRISTIE யை எதிர்த்து விளையாடினார்.
தரவரிசையில் 22வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் லக்சயா சென்-ஐ, முதல் செட்டில் 8-2 என ஆதிக்கம் செலுத்திய ஜொனாடன் கிறிஸ்டி பயமுறுத்தினார். ஆனால் நெஞ்சில் நம்பிக்கையுடன் இருந்த லக்சயா சென் 2-8 என பின்தங்கியிருந்த போதிலும், தன்னுடைய ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்தி முதல் செட்டை 21-18 என கைப்பற்றி அசத்தினார்.
அதற்குபிறகு அவர் செய்த சம்பவம்தான் இணையத்தை வைரலாக்கி வருகிறது. முதல் செட்டை வென்ற பிறகு கொஞ்சம் கூட JONATHAN CHRISTIE-க்கு வாய்ப்பு வழங்காத சென், கையை பின்பக்கமா சுழற்றி டிஃபண்ட் செய்து இரண்டாவது செட்டையும் கைப்பற்றி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தார்.
உலகத்தின் 3ம் தரவரிசை வீரரை அசால்ட்டாக வீழ்த்திய இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 8 வருடங்களுக்குப் பிறகு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் ஆவார்.
லக்சயா சென் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம், 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.