ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்திய விளையாட்டு வீரருக்கும் மிகப்பெரிய கனவாகவே இருந்துவருகிறது. 1900-ம் ஆண்டு தொடங்கிய இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் நீரஜ் சோப்ரா தடகளத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக, ஒரேஒரு தனிநபர் தங்கப்பதக்கம் மட்டுமே இந்தியாவிற்கு சொந்தமாக இருந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கப்பதக்கமே, இந்தியாவிற்காக ஒரு தனிநபர் வென்ற முதல் மற்றும் கடைசி தங்கப்பதக்கமாக ஒலிம்பிக்கில் பொறிக்கப்பட்டது.
அதற்குபிறகு அந்த எண்ணிக்கையை இரண்டாக உயர்த்திய பெருமை இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கே சேரும். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கத்தை தட்டிச்சென்ற நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கான இரண்டாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
தற்போது ஒலிம்பிக்கில் இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற யாரும் படைக்காத சாதனையை படைக்கும் லட்சியத்தில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கியிருக்கும் நீரஜ் சோப்ரா, தகுதிசுற்றின் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கையாக நீரஜ் சோப்ரா மாறியுள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்துவந்த பாதையை பார்ப்போம்..
நீரஜ் சோப்ரா டிசம்பர் 24, 1997-ம் ஆண்டு ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா கிராமத்தில் சதீஷ்குமார் மற்றும் சரோஜ் தேவி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். குறைந்த வருமானம் கொண்ட ஒரு ஏழை விவசாயிக்கு, சங்கீதா மற்றும் சரிதா என்ற இரண்டு தங்கைகளுடன் பிறந்த சோப்ரா வளரும்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது.
ஒரு குழந்தையாக நீரஜ் சோப்ரா அதிக எடையுடன் போராடினார், 11 வயதில் சுமார் 90 கிலோ எடையுடன் இருந்தார் சோப்ரா. அந்தகுறை தான் இந்தியாவிற்கு ஒரு தங்க மகனை பரிசளிக்கும் நிறையாக மாறியது. அதிக எடையுடன் இருந்த நீரஜ்ஜின் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவரது தந்தை அவரை அருகிலுள்ள நகரமான மட்லாடாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்தார். பயிற்சிக்கு பிறகு சோப்ரா அருகிலுள்ள சிவாஜி ஸ்டேடியத்தில் நேரத்தைச் செலவழித்தார், அங்கு அவரின் சகவயதுடைய மற்ற குழந்தைகள் ஈட்டி எறிவதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சோப்ராவிற்கு ஈட்டி எறிதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
அவரின் ஆர்வத்தை பார்த்த தந்தை சதீஷ்குமார் ஏழ்மையான சூழல் இருந்தபோதும் தனது மகனின் பயிற்சி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவரால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்கு பெரிதும் பக்கபலமாக நின்றது 3 மாமாக்கள் உட்பட 19 உறுப்பினர்கள் கொண்ட அவரின் கூட்டுக்குடும்பம்தான். ஒரு பக்கம் குடும்பம் நின்றது என்றால், மற்றொரு பக்கம் ஈட்டி எறிதல் விளையாட்டு பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் அவருடைய கிராமத்தினர் பக்கபலமாக நின்றனர்.
குடும்பம் மற்றும் ஊர்மக்கள் ஊக்குவிப்பு காரணமாக சிவாஜி ஸ்டேடியத்தில் ஓராண்டு பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தவ் தேவி லால் விளையாட்டு வளாகத்திற்குச் சென்று பயிற்சியாளர் நசீம் அகமதுவிடம் பயிற்சி பெற்றார். பின்னர் நீரஜ் சோப்ரா சண்டிகரில் பட்டப்படிப்பும் பஞ்சாப்பில் இளங்கலைப் படிப்பும் முடித்தார்.
ஒருபக்கம் அடிப்படை தேவைக்கு கூட குடும்பம் கஷ்டப்படும் நிலையை உணர்ந்த நீரஜ் சோப்ரா, 2012-ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாம்பியானாக உருமாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அங்கிருந்து பதக்கவேட்டையை துவங்கிய நீரஜ் சோப்ரா, 2014-ம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதுதான் அவருடைய முதல் சர்வதேசப் பதக்காமாக அமைந்தது. அதற்குபிறகு அவர் திரும்பிப்பார்க்கவே இல்லை, பங்கேற்ற 11 தொடர்களில் 9 தங்கப் பதக்கங்களை வென்று குவித்த அவர், இந்திய விளையாட்டில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.
2016-ம் ஆண்டு சவுத் ஆசியன் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சோப்ரா, அதே ஆண்டில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று வரலாறு படைத்தார். அதன்மூலம் ‘20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உலக சாம்பியனான முதல் இந்திய தடகள வீரர்’ என்ற உலக சாதனை படைத்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இடம்பிடித்து தங்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, தகுதிச் சுற்றில் காயமடைந்த நீரஜ் 2016 ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஒருவேளை அவர் அதில் கலந்துகொண்டிருந்தால், ‘2016 ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்கு தங்கம் உறுதி செய்யப்பட்டிருக்கும்’ என சொல்லப்பட்டது.
என்னதான் சாதனைக்கு மேல் சாதனையை குவித்தாலும் நீரஜ் குடும்பத்தின் வறுமை மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. அந்த சமயத்தில் தான் 2017ம் ஆண்டு இந்திய ராணுவம் நீரஜ் சோப்ராவுக்கு ஜூனியர் கமிஷன் அதிகாரியாக வேலை வழங்கி அவரின் வறுமைக்கு ஒரு முற்றிப்புள்ளியை ஏற்படுத்தியது. அந்தவேலை குறித்து பேசிய நீரஜ் சோப்ரா “எனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடிந்தது எனக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
அதற்குபிறகு விளையாட்டில் முழுக் கவனம் செலுத்திய நீரஜ் சோப்ரா, 2017-ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் முதலிடம், 2018-ல் காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசியன் போட்டிகளில் தங்கம் வென்று சாதனைக்கு மேல் சாதனை படைத்தார். அதற்குபிறகு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தியாவின் தங்க மகனாக மாறி பெருமை சேர்த்தார். தன்னுடைய பெயரில் ஒரு ஒலிம்பிக் தங்கம் உட்பட 9 தங்கங்களை வைத்திருக்கும் நீரஜ் சோப்ரா, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று வரலாறு படைப்பார் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்துவருகிறது.
2016 உலக யு20 சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48மீ - தங்கம்
2016 தெற்காசிய விளையாட்டு - 82.23 மீ - தங்கம்
2017 ஆசிய சாம்பியன்ஷிப் ஜூனியர் - 85.23 மீ - தங்கம்
2018 காமென்வெல்த் - 86.47 மீ - தங்கம்
2018 ஆசிய விளையாட்டு - 88.06 மீ - தங்கம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் - 87.58மீ - தங்கம்
2022 உலக தடகள சாம்பியன்ஷிப் - 88.39 மீ - வெள்ளி
2022 டைமண்ட் லீக் - 89.94 மீ - தங்கம்
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் - 88.17மீ - தங்கம்
2023 டைமண்ட் லீக் - 83.80 மீ - வெள்ளி
2023 ஆசிய விளையாட்டு - 88.88 மீ - தங்கம்