ஒலிம்பிக்கில், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் பதக்கம் மூலம் பதில் அளித்துள்ளார் இமானோ கெலிஃப். பாலினம் சார்ந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப், முதன்முறையாக ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்து சாதனை படைத்துள்ளார்.
மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப், காலிறுதி போட்டியில் ஹங்கேரியின் லூகா அன்னா ஹமோரியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 5க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் இமானே கெலிஃப் வெற்றி பெற்றார்.
அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், ஒலிம்பிக் பதக்கத்தை அவர் உறுதி செய்தார். இதன்மூலம், அல்ஜீரியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை கெலிஃப் படைத்துள்ளார். அவரது வெற்றியை அந்நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இமானே கெலிஃப் மற்றும் தைவான் நாட்டை சார்ந்த Lin Yu- ting ஆகியோரின் பாலினம் குறித்து சர்ச்சை எழுந்தது. testosterone வளர்ச்சி பெரும்பாலான வீராங்கனைகளுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு வீராங்கனையை தவறாக கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.