அமன் ஷெராவத் web
ஒலிம்பிக்ஸ்

’இன்னொரு பதக்கத்தை இழக்க முடியாது’- துளிகூட தூங்காமல் 7 தீவிர பயிற்சிகள்! 4.6KG எடை குறைத்த ஷெராவத்!

Rishan Vengai

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து பாரீஸ் சென்ற 117 பேர் கொண்ட குழு 69 பதக்கப்போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிவரும் நிலையில், இதுவரை இந்தியா ஒரு வெள்ளி 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இந்தியாவின் பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலங்களும், துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே ஒரு வெண்கலம், இந்திய ஹாக்கி அணி ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் என 5 பதக்கங்கள் முதலில் பதிவுசெய்யப்பட்டன.

அமன் ஷெராவத்

இந்நிலையில் மற்றொரு பதக்கத்திற்கான நம்பிக்கையாக அரையிறுதிவரை சென்று தோல்வியடைந்த இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் இருந்தார். அவர் வெள்ளிக்கிழமையான நேற்று வெண்கலத்திற்கான போட்டியில் பங்கேற்ற நிலையில், அவர் மீதான பெரிய எதிர்ப்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. காரணம் அவர் 2024 ஜனவரியில், ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

வெண்கலப் பதக்கம் வென்று சாதனை..

11 வயதில் தாய்-தந்தையை இழந்து, தன்னுடைய ரோல் மாடலான 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவி தஹியாவை குவாலிஃபயர் சுற்றில் தோற்கடித்து பல இன்னல்களை கடந்து கனவோடு வந்த அமன் ஷெராவத், தன்னுடைய முதல் ஒலிம்பிக் தொடரிலேயே வெண்கலம் வென்று அசத்தினார்.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு போட்டியில் பங்கேற்ற அமன் ஷெராவத், பியூர்டோ ரிகோ வீரர் டாரியன் க்ரூசை எதிர்கொண்டு விளையாடினார்.

தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அமன் ஷெராவத் டாரியனுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டாரியன் க்ரூசை வீழ்த்திய அமன் இந்தியாவுக்கான வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஒரேஒரு ஆண் மல்யுத்த வீரராக பங்கேற்ற அமன் ஷெராவத் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆனால் வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு இடையில் அமன் ஷெராவத் எடைகுறைப்பு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. ஏற்கெனவே எடைக்குறைப்பு விவகாரத்தில், தங்கம் வெல்வதை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தவறவிட்ட நிலையில், அமன் ஷெராவத்தும் இன்னொரு பதக்கத்தை இழக்கும் இடத்தில் இருந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்துள்ளது.

10 மணிநேரத்தில் 4.6 கிலோ எடையை குறைக்கும் சவால்..

ஆண்களுக்கான மல்யுத்த 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டி வியாழன் மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. அரையிறுதிவரை முன்னேறிய அமன் ஷெராவத், அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ரெய் ஹிகுச்சிக்கு எதிராக தோல்வியடைந்தபோது ஷெராவத் 61.5 கிலோ எடையுடன் இருந்ததுள்ளார். அதாவது அவருடைய 57 கிலோ எடைப்பிரிவை தாண்டி 4.5 கிலோ எடை கூடுதலாக இருந்துள்ளார்.

வெண்கலத்திற்கான போட்டி மறுநாளே நடைபெறவிருக்கிறது என்ற கடினமான சூழலில் இந்திய முகாமில் பீதி நிலவியது. ஏனென்றால் இந்த வார தொடக்கத்தில் இதேபோலான எடைகுறைப்பு பிரச்னையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப்போட்டியில் பங்கேற்கவிடாமல் பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதக்கமும் மறுக்கப்பட்டது.

அமன் ஷெராவத்

இந்நிலையில் இந்திய முகாமால் மற்றொரு அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை, எனவே ஆறு பேர் கொண்ட மல்யுத்தக் குழுவின் இரண்டு மூத்த இந்திய பயிற்சியாளர்களான ஜக்மந்தர் சிங் மற்றும் வீரேந்தர் தஹியா ஆகியோர் அடுத்த எடைசோதனைக்கு கடிகாரத்தில் 10 மணிநேரம் மட்டுமே மீதம் உள்ள நிலையில், எடைக்குறைப்பு 'மிஷன்'-ஐ கையில் எடுத்தனர்.

7 தீவிர பயிற்சிகளை மேற்கொண்ட அமன் ஷெராவத்..

எடைக்குறைப்பு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அமன் ஷெராவத்துக்கு மட்டுமல்ல, அங்கிருந்த ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவுக்கும் சவால் அதிகமாகவே இருந்தது.

ஏனென்றால் ஒருவேளை இன்னொரு பதக்கம் கைநழுவி போனால் படுமோசமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதை எல்லாவற்றையும் மீறி இந்தியாவிற்கான ஒரு பதக்கம் கைநழுவிப்போகும். அதனால் ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான ஒரு சவாலை எதிர்கொண்டு போராட ஆரம்பித்தனர்.

aman sehrawat

எப்படி எடைக்குறப்பு சாத்தியமானது:

1. இரண்டு மூத்த பயிற்சியாளர்களுக்கு எதிராக ஒன்றரை மணி நேரம் மல்யுத்தத்தின் பாய் அமர்வில் மோதினார் அமன் ஷெராவத்.

2. அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஹாட்-பாத் (hot-bath) அமர்வு நடைபெற்றது.

3. நள்ளிரவைக் கடந்த 30 நிமிடங்களில், டிரெட்மில்லில் ஒரு மணிநேரம் இடைவிடாத ஓட்டத்தில் ஈடுபட்டார்.

4. பின்னர் அவருக்கு 30 நிமிட இடைவெளி வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 25 நிமிடங்கள் ஐந்து அமர்வுகளாக 5 நிமிட சானா குளியல் (sauna-bath) அமர்வு நடைபெற்றது.

5. இத்தகைய கடின முயற்சிகளுக்கு பிறகு முந்தைய நாளின் முடிவில் ஷெராவத் 3.6 கிலோ எடையை குறைத்தார். பின்னர் அவருக்கு மசாஜ் செய்யப்பட்டது.

6. அதைத்தொடர்ந்து லைட் ஜாகிங்கில் ஈடுபட்டார்.

7. பின்னர் 15 நிமிட ஓட்ட அமர்வு வழங்கப்பட்டது. அதிகாலை 4:30 மணியளவில், அவரது எடை 56.9 கிலோவாகக் குறைந்தது, அது அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் குறைவாக இருந்தது, அதைப்பார்த்த பயிற்சியாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

8. இந்த எடை குறைப்பு அமர்வுக்கு இடையில், அதன் பிறகும் தூங்காமல் இருந்தார் ஷெராவத், அவருக்கு எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரும், சிறிது காபியும் மட்டுமே குடிக்க கொடுக்கப்பட்டது.

அமன் ஷெராவத்

மிகப்பெரிய சவாலை எதிர்கொண்ட பயிற்சியாளர் தஹியா கூறுகையில், “நான் மல்யுத்தப் போட்டிகளின் வீடியோக்களை இரவு முழுவதும் பார்த்தேன். ஒவ்வொரு மணி நேரமும் அவரது எடையை பரிசோதித்தோம். இரவு முழுவதும், ஏன் பகலிலும் நாங்கள் தூங்கவில்லை. வெயிட் கட்டிங் என்பது எங்களுக்கு வழக்கமானதுதான் என்றாலும், வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட சிக்கல் போல போட்டியானது மறுநாளே என்பதால் எங்களுக்கு டென்ஷன் அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் எங்களால் இன்னொரு பதக்கத்தை நழுவ விட முடியாது” என்று கூறினார்.