இந்திய மக்களுக்கு இன்றைய நாள் வராமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எல்லோரின் மனநிலையிலும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் 50கிலோ எடை இறுதிப்போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிவருவார் என எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100கிராம் எடையிருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரிய இடியாக இறங்கியுள்ளது.
இந்த தகுதிநீக்கத்தால் வினேஷ் போகத்துக்கு பதக்கமும் கிடையாது, தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்திற்கும் தள்ளப்படுவார் என்ற தகவல் மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் தானே விளையாட முடியாது அரையிறுதியில் அவர்தானே வென்றார், அதற்கான பதக்கத்தையாவது கொடுங்கள் என்ற பல ரசிகர்களின் ஆதங்கம் சமூகவலைதளங்களில் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் வினேஷ் போகத்தை போல ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட கென்யா வீராங்கனை ஒருவர் மேல்முறையீடு செய்து இழந்த பதக்கத்தை வென்றுள்ள மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள் வினேஷ் போகத்திற்கும் மேலுமுறையீட்டின் மூலம் நீதிகிடைக்காதா?, அரையிறுதிவரை முன்னேறிய அவருக்கான பதக்கம் கிடைக்காதா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். இருப்பினும் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தங்கள் திறமைகள் மூலம் “கென்யாவின் பீட்ரைஸ் செபெட் முதல் இடமும், மற்றொரு கென்ய வீராங்கனையான ஃபெய்த் கிபிகோன் இரண்டாவது இடமும், நெதர்லாந்தின் சிஃபன் ஹாசன் மூன்றாவது இடமும் பிடித்து, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை” உறுதிசெய்தனர்.
ஆனால் வெள்ளிப்பதக்கம் கிடைத்துவிட்டது என்ற பெருமகிழ்ச்சியுடன் மீடியாவை சந்திக்க சென்ற கென்ய வீராங்கனை ஃபெய்த் கிபிகோன், தான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவரம் அறிந்து ஏமாற்றத்துடன் கண்ணீர் சிந்தினார். கிடைத்த விவரத்தின் படி, ஃபெய்த் கிபிகோன் ஓட்டப்பந்தயத்தின் போது வெண்கல பதக்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை சிஃபன் ஹாசன் முன்னேறி செல்வதற்கு இடையூறு செய்ததாகவும், அவரை வெள்ளிப்பதக்கம் வெல்லவிடாமல் களத்தில் தடங்கல் ஏற்படுத்தியதாகவும் கூறி கிபிகோனின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தகுதிநீக்கம் குறித்து கண்ணீருடன் பேசிய கிபிகோன், "தற்போது நடந்ததில் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டேன், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது? எதனால் தகுதிநீக்கம் என்று எனக்குத் தெரியவில்லை" என்று உணர்ச்சிவசப்பட்ட கிபிகோன் கண்ணீருடன் கூறினார்.
கென்யாவின் கிபிகோன் சார்பில் அவர்களின் பயிற்சியாளர் குழு ஒலிம்பிக் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தது, அதில் கிபிகோனின் தகுதிநீக்கம் ரத்துச்செய்யப்பட்டு அவருக்கான வெள்ளிப்பதக்கமும் உறுதிசெய்யப்பட்டது.
கென்யாவின் முயற்சியில் வெற்றிகிடைத்ததையடுத்து இந்த சம்பவத்தை பார்த்த இந்திய ரசிகர்களும் வினேஷ் போகத்திற்கும் பதக்கம் கிடைக்க வேண்டும். அவர் அரையிறுதிப்போட்டிவரை சரியான உடற்தகுதியுடன் தானே போட்டியிட்டார், அவருக்கான பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேல்முறையீட்டுக்கு முன்பு பேசியிருந்த கிபிகோன், “எனக்கும் குடாஃப் என்ற மற்றொரு வீராங்கனைக்கும் இடையில் சில தள்ளுமுள்ளு இருந்தது, நான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தேன், அவர் என்னை பாதைக்கு வெளியே தள்ளிவிட்டு முந்தும்விதத்தில் செயல்பட்டார், நான் என்னை வெளியே தள்ளிவிடாதே என்று அவரிடம் சொன்னேன், ஆனால் அவர் என்னைத் தள்ளிக்கொண்டே இருந்தார்,
நான் எங்கு ஓடுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் எந்த இடையூறும் செய்யவில்லை மேல்முறையீட்டிற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.