2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது. அந்தவகையில் இன்றைய 5வது நாள் முடிவில் அடுத்த பதக்கத்திற்கான தேடலில் முன்னேற்றம் கண்ட 7 இந்திய வீரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
இதையும் படிக்க: காலிறுதியில் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா.. ஆனால் பதக்கம் வெல்வதில் பெரிய சிக்கல்?
பைனல் சென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே:
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்று கடைசிப்போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே, க்னீலிங் பொஷிசனில் 198 (99, 99) புள்ளிகள், ப்ரோன் மற்றும் ஸ்டேண்டிங் பொஷிசனில் 197 (98, 99) மற்றும் 195 (98, 97) புள்ளிகளும் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் 8 இடங்களுக்குள் தன் இடத்தை தக்கவைத்தார்.
ஒட்டுமொத்த ஸ்கோரான 590 (38x) உடன் 7வது இடத்தில் முடித்த குசலே, தன்னுடைய பைனல் சுற்றில் நாளை பங்கேற்க உள்ளார். குசலே இந்தியாவிற்காக 3வது பதக்கத்தை எடுத்துவருவார் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருக்கிறது.
காலிறுதிக்கு முன்னேறிய குத்துச்சண்டை வீராங்கனை:
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் 16-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் ஜூனியர் உலக சாம்பியனான நார்வேவின் சன்னிவா ஹோஃப்ஸ்டாட்டை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்த இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தினார்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் காலிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் லி கியானை எதிர்கொள்கிறார். கியான் ஏற்கனவே ஹாங்சோ 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் போர்கோஹைனை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம்பர் 3 உலக வீரரை வீழ்த்திய லக்சயா சென்:
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் ’எல்’ குழுவின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. பகல் 1.40 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தரவரிசையில் 22வது இடத்திலிருக்கும் இந்தியாவின் லக்சயா சென், உலக தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் இந்தோனேசியா நாட்டின் JONATHAN CHRISTIE யை 21-18 21-12 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவுசெய்தார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு லக்சயா சென் தகுதிபெற்றுள்ளார்.
3வது ஒலிம்பிக் பதக்கம் நோக்கி பிவி சிந்து:
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது மற்றும் கடைசி குரூப் M போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்த்து விளையாடினார். போட்டியில் குவாவை 21-5, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்திய சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தினார். இதுவரை அதிகபட்சமாக 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற 4 இந்திய வீரர்களில் ஒருவராக இருக்கும் பிவி சிந்து, இந்தியாவிற்காக அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் வீரராக வரலாறு படைக்கும் இடத்திற்கு செல்ல இன்னும் இரண்டு அடிகளே பின்தங்கியுள்ளார்.
அசத்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஶ்ரீஜா அகுலா:
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஶ்ரீஜா அகுலா, சிங்கப்பூர் வீராங்கனை JIAN ZING-ஐ 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஒலிம்பிக்ஸ் தொடர் தொடங்கும் வரை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய சார்பில் தனி வீரர்கள் பிரிவில் யாருமே 3வது சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மணிகா பத்ரா மற்றும் ஶ்ரீஜா அகுலா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளனர்.
காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறிய வில்வித்தை வீராங்கனை:
மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நெதர்லாந்து வீராங்கனை QUINTY ROEFFEN ஐ 6-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
தோல்விகள்:
* இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான ஐஸ்வரி தோமர் கடைசி தகுதிசுற்றுப்போட்டியில் 589 புள்ளிகளுடன் 11வது இடத்தில் முடித்து தொடரிலிருந்து வெளியேறினார்.
* மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றுப்போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வியடைந்து வெளியேறினார்.
* ஆடவர் வில்வித்தை 64வது சுற்றில் பிரிட்டனின் டாம் ஹாலுக்கு எதிராக இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்து வெளியேறினார்.
* குதிரையேற்றம் பிரிவில் இந்தியாவிற்காக முதல்முறையாக பங்கேற்ற ஒரே வீரரான அன்ஷு அகர்வல்லா, தனிநபர் டிரஸ்ஸேஜ் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதையும் படிக்க: இந்தியாவிற்கு அடுத்த பதக்கம்? பைனலுக்கு முன்னேறிய துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே!