ஹுவாங் யாகியாங், லியு யுசென் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்

Prakash J

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது கடந்த ஜூலை 25அம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். களைகட்டி வரும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யாகியாங். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவிற்கு தங்கப் பதக்கத்தைத் தேடித் தந்தார். அந்தப் பதக்கத்துடன் மேடையில் தோன்றியவரிடம் அவரது காதலரான லியு யுசென், அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹுவாங் யாகியாங் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார். மேலும், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை எடுத்து மண்டியிட்டப்படியே ஹுவாங்கிடம், திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். இதனால், ஹுவாங் மேலும் ஆச்சர்யமடைந்தார். பின்னர் அவரும் ஆனந்தக் கண்ணீருடன் ’ஆம்’ எனப் பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது பல டெசிபல் அளவில் விண்ணைப் பிளந்தது.

இதையும் படிக்க: திருமணம் பற்றிய பட்டப்படிப்பு: அறிமுகப்படுத்தும் சீனப் பல்கலைக்கழகம்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இதுகுறித்து பேசிய ஹுவாங், "தங்கம் வென்றதால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எங்கள் பயணத்திற்கான அங்கீகாரம். என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒலிம்பிக் சாம்பியனாக மாறுவதற்காக பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தேன். இதை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

இதே ஒலிம்பிக் தொடரில் ஹுவாங்கின் காதலரான லியு யுசென்னும் பங்கேற்றிருந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அவர், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர், இது தனது கடைசி ஒலிம்பிக் போட்டி என்றும், அதனால் அதை பயன்படுத்திக் கொண்டு அனைவர் முன்பும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹுவாங்-கிடம் கேட்டதாகவும் லியு யுசென் தெரிவித்தார்.

இதையும் படிக்க: 31 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு! 73 வயது நபர் மீது பெண் தொடுத்த வழக்கு.. ரத்து செய்த நீதிமன்றம்!