2024 பாரீஸ் ஒலிம்பிக்கை பொறுத்தவரை 7 ஆண்டுகள் உடைந்த ஈட்டியுடன் பயிற்சிபெற்று தங்கம் வென்றபிறகு உடைந்து அழுத அர்ஷத் நதீம், 5 முறை தொடர்ச்சியாக தங்கம் வென்று மல்யுத்த மேடையில் ஷூவை கழற்றி வைத்து எமோசனலாக ஓய்வை அறிவித்த கியூபா வீரர், தங்கம் வென்ற பிறகு பரிசாக வாத்து வேண்டும் என கூறிய 14 வயது ஆஸ்திரேலியா வீராங்கனை, தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தை விட சிறிய நாடான செயிண்ட் லூசியா நாட்டிலிருந்து முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர் ஜூலியன் ஆல்பிரட் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டு பதக்கங்களை தட்டிச்சென்றது என பல்வேறு அழகான தருணங்கள் நடப்பு ஒலிம்பிக்கில் அரங்கேறியுள்ளன.
அந்தவகையில் மீண்டும் மக்களின் மனதை கவரும் வகையில் ஒரு சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக்கில் அரங்கேறியது. ஹேண்ட்பால் போட்டியில் எதிரணி வீராங்கனை ஒருவர் காயம் காரணமாக நடக்க முடியாமல் தடுமாறிய போது, ஒரு அடிகூட அவரால் அசைய முடியவில்லை. அப்போது ஓடிவந்த எதிரணி வீராங்கனை ஒருவர் நடக்க முடியாமல் தடுமாறியவரை தனியாளாக தூக்கிச்சென்று மருத்துவக்குழுவிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹேண்ட்பால் இறுதிப் பிரிலிமினரி ரவுண்ட் குரூப் பி மகளிர் ஆட்டத்தில் அங்கோலா மற்றும் பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது அங்கோலாவின் கேப்டன் ஆல்பர்டினா கஸ்ஸோமாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை இரண்டுபேர் கைதாங்கலாக தூக்கியும் கஸ்ஸோமாவால் ஒருஅடி கூட நகரமுடியவில்லை.
அதனை பார்த்துக்கொண்டிருந்த பிரேசில் வீராங்கனை டாமிரெஸ் மொரேனா, அவரால் அசைக்க கூட முடியவில்லை என்பதை அறிந்து அருகில் ஓடிவந்து யாரும் வேண்டாம் நானே தூக்கிச்செல்கிறேன் என 183 செமீ உயரம் உடைய கஸ்ஸோமாவை தனியாளாக கோர்ட்டிற்கு வெளியே தூக்கிச்சென்று மருத்துவக்குழுவிடம் ஒப்படைத்தார். மொரேனாவின் இந்த செயல் அரங்கில் கூடியிருந்த 5,800 ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது.
உதவியதற்கு பிறகு பேசிய மொரேனா, “காயம் எனக்கு அருகாமையில் தான் நடந்தது, நான் முதலில் அது சாதாரணமானது தான் என நினைத்து தொடர்ந்து விளையாடினேன், ஏனென்றால் அது அவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தரையில் விழுந்த அவரால் எழுந்திருக்க முடியாததை பார்த்தபோது அது பெரிய காயம் என்பதை உணர்ந்தேன். இப்படி நிகழ்வது அரிதான ஒன்று, அதனால் சென்று உதவினேன். அதற்குமேல் அவர் என்னுடைய தோழி, நானும் அவரும் பல வருடங்களாக சேர்ந்து விளையாடியுள்ளோம். அதனால் அவர் மீது தனி பாசம் வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.