2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது.
அந்தவகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான லோவ்லினா போர்கோஹைன், நடப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தன்னுடைய இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை தேடும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் 16-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் ஜூனியர் உலக சாம்பியனான நார்வேவின் சன்னிவா ஹோஃப்ஸ்டாட்டை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்த இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தினார்.
நடைபெற்ற போட்டியில் 2022-ம் ஆண்டின் ஜூனியர் உலக சாம்பியனான ஹாஃப்ஸ்டாட், இந்தியாவின் லோவ்லினாவை முதல் சுற்றில் வேகமான குத்துகள் மூலம் நிலைகுலையச் செய்தார். ஆனால் அதற்குபிறகு கம்பேக் கொடுத்த லோவ்லினா இரண்டு ஜப்ஸ் மற்றும் வலது கொக்கி மூலம் பதிலடி கொடுத்து மிகவும் தேவையான புள்ளிகளைச் சேகரித்தார்.
இரண்டாவது சுற்றில் அட்டாக் மோடிற்கு சென்ற லோவ்லினா ஹாஃப்ட்சாட்டின் முகத்தில் பலத்த அடிகளை அடிக்க ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். மூன்றாவது சுற்றில் ஹோஃப்ஸ்டாட் எப்படியாது மறுபிரவேசம் செய்ய நினைத்தாலும், அது இறுதியில் சற்று தாமதமானது. முடிவில் 5-0 என்ற கணக்கில் அசால்ட்டாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார் லோவ்லினா.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்கு முன்னேறினாலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் காலிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் லி கியானை எதிர்கொள்கிறார். கியான் ஏற்கனவே ஹாங்சோ 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் போர்கோஹைனை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல லோவ்லினாவும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 75 கிலோ பிரிவு அரையிறுதியில் சீனாவின் லி கியானை வீழ்த்தியுள்ளார். இந்த இரண்டு அற்புதமான வீரர்களுக்கும் ஒரு பலத்த போட்டியாக காலிறுதிப்போட்டி அமையவிருக்கிறது. ஒருவேளை காலிறுதியில் லி கியானை லோவ்லினா வென்று பதக்கத்தை உறுதிசெய்யும் பட்சத்தில், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் 2 பதக்கங்களை வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை லோவ்லினா படைப்பார்.