taapsee pannu - imane khelif web
ஒலிம்பிக்ஸ்

இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆனால் அதற்குமுன்னதாக, 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே கெலிப்பின் குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 வினாடிகளில் அழுதபடி போட்டியில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இமானே கெலிஃபின் பாலினம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2023 உலக சாம்பியன்ஷிப்பின் பாலின தகுதியில் இமானே கெலிஃபின் உடலில் ஆண்தன்மையை உண்டுபண்ணக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருந்ததால், அவர் ஒரு பயாலஜிக்கல் ஆண் என்றுகூறி இறுதிப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படாமல் உலக சாம்பியன்ஷிப் கமிட்டியால் இமானே தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்போது 2024-ல் மீண்டுமொருமுறை ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதியை நிரூபிக்க தவறிய ஒரு பயலாஜிக்கல் ஆண், எப்படி பெண்களுக்கான போட்டிப்பிரிவில் பங்கேற்க முடியும்?’ என்ற சர்ச்சைமிக்க கேள்வி பூதாகரமாக வெடித்தது.

இருப்பினும், ‘இமானேவின் பாஸ்போர்ட்டில் அவர் பெண் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளார்’ எனக் கூறிய ஒலிம்பிக் கமிட்டி இமானேவை தொடர்ந்து விளையாட அனுமதித்தது. இதனால் இமானே இறுதிப்போட்டிவரை சென்று தங்கம் வென்றாலும், அவர் மீதான பாலின சர்ச்சையானது தொடர்ந்து விவாதத்திலேயே இருந்துவருகிறது.

இதையும் படிக்க: “ஒரு வாத்து வாங்க ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி..”! 14 வயதில் நாட்டின் இளம் வீரராக சாதனை!

இமானே கெஃலிப்

இந்நிலையில் இந்திய நடிகையான டாப்ஸி, இமானே கெலிஃபுக்கு ஆதரவாக அழுத்தமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உசைன் போல்ட் ஏன் தடைசெய்யப்படவில்லை?

இமானே கெலிஃப் குறித்து ஏஎன்ஐ உடன் பேசியிருக்கும் டாப்ஸி, “இதேபோன்று விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் பாலின சர்ச்சையை மையக்கருவாக கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் ரஷ்மி ராக்கெட் என்னும் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒரு பெண் தடகள வீராங்கனை, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால் தடை செய்யப்பட்டதை மையக்கருவாக கொண்ட படம்தான் ‘ரஷ்மி ராக்கெட்’. அந்த வீராங்கனைக்கு நிகழ்ந்த கொடுமையை எதிர்த்துதான் படத்தில் நாங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தோம்.

அந்தப் படத்தில் பேசியிருப்பதுதான் என்னுடைய கருத்தும். ஹார்மோன் என்பது, நம்முடைய கையில் இல்லை. நாம் ஹார்மோன்களை அதிகரிக்க எந்த ஊசியையும் செலுத்திக்கொள்வதில்லை. ஆகவே நம்முடைய கையில் இல்லாத ஒரு விஷயத்திற்காக, நாம் எதற்காக தடை செய்யப்பட வேண்டும்?

அப்படியானால் உசைன் போல்ட், மைக்கேல் பெல்ப்ஸ் போன்ற பல வீரர்கள் நீளமான கை, கால்கள் போன்ற உயிரியல் விளிம்புடன் பிறக்கிறார்கள். அவர்கள் மற்றவீரர்களை விட வித்தியாசப்படுகிறார்கள்தானே... அவர்கள் ஏன் தடைசெய்யப்படவில்லை? வாழ்க்கை முழுவதும் பெண்ணாகவே வளரும் ஒரு நபர், திடீரென ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பால் தடை செய்யப்படுவது நியாயமானது இல்லை” என்று தன்னுடைய கருத்தை அழுத்தமாக முன்வைத்துள்ளார்.