நீரஜ் சோப்ரா web
ஒலிம்பிக்ஸ்

“சிறந்ததை கொடுக்கவில்லை என்றால் நிம்மதியாக இருக்க மாட்டேன்..”- Final-க்கு பிறகு நீரஜ் சொன்னது!

Rishan Vengai

இந்தியாவின் தங்க மகன் என அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா, நேற்றிரவு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 89.45 மீ எறிதலுடன் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நீரஜ் சோப்ரா தங்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கையை 92.97மீ என்ற ஒலிம்பிக் வரலாற்று சாதனையை படைத்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தட்டிப்பறித்து தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

நீரஜ் சோப்ரா

116 வருட ஒலிம்பிக் சாதனையை முறியடித்த அர்ஷீத் நதீம் நேற்று சிறந்த இரவை கொண்டிருந்தார். இரண்டாவது சுற்றில் 92.97மீட்டர் தூறம் எறிந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நதீம், தன்னுடைய கடைசி எறிதலிலும் 91.79 மீ தூரம் எறிந்து இரண்டு முறை ஒலிம்பிக் சாதனையை முறியடித்து பிரம்மிக்க வைத்தார்.

நீரஜ் சோப்ரா

89.45 மீட்டர் தூரம்வரை எறிந்த நீரஜ் பதிலடி கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், சிறந்த எறிதலை வீசிய போதும் நீரஜ்ஜின் மற்ற 5 எறிதல்களும் பவுலாக மாறியது. முடிவில் இரண்டு ஆசிய வீரர்கள் ஈட்டி எறிதலில் மற்ற நாட்டு வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். வேறுயாராலும் இருவரையும் நெருங்க முடியவில்லை.

நிம்மதியாக இருக்க மாட்டேன்..

அர்ஷத்தீன் திறமையை எப்போதும் மதிப்பிடும் நீரஜ் சோப்ரா, இரண்டு ஆசிய வீரர்கள் ஈட்டி எறிதலில் முன்னணியில் இருப்பதை பெருமையாக இதுவரை பேசியிருக்கிறார். இருப்பினும் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து பேசியவர், தனக்குள் இன்னும் வெளிப்படுத்த வேண்டிய திறமை நிறைய இருக்கிறது என்றும், தன்னால் சிறந்ததை கொடுக்க முடியவில்லை என்றால் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ‘அவரின் அழகு, சக வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது’ - நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்ட வீராங்கனை?

இறுதிப்போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா, “நான் 2016 முதல் அர்ஷத்திற்கு எதிராக போட்டியிடுகிறேன், ஆனால் நான் அவரிடம் தோற்றது இதுவே முதல் முறை. அதற்காக அவரை பாராட்ட வேண்டும், அர்ஷத் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், இந்த இரவில் என்னை விட அவர் சிறப்பாக இருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டினார்.

நீரஜ் சோப்ரா

தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்காதது குறித்து பேசிய அவர், “நான் எறியும் போதெல்லாம், 60-70 சதவீத கவனமானது காயத்தின் மீதே இருந்தது. இன்று நான் ஓடியதும் சரியானதாக இருக்கவில்லை, வேகமும் குறைவாகவே இருந்தது. நான் இதையெல்லாம் கடந்துதான் இன்றைக்கு செயல்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சைக்கு நேரம் இல்லை. நான் என்னை இன்னும் முன்னே தள்ள நினைக்கிறேன். என்னிடத்தில் நிறைய இருக்கிறது, என்னால் முடியும் என்ற உணர்வும் எனக்குள் இருக்கிறது. நான் என் சிறந்ததை அடையாவிட்டால் நிம்மதியாக இருக்க மாட்டேன். இன்று நம் தேசிய கீதம் ஒலிக்காமல் இருக்கலாம், ஆனால் இன்னொரு நாள் நிச்சயம் இங்கு ஒலிக்கும்” என்று பேசினார்.

neeraj chopra

ஆனால் காயத்திலிருந்து மீண்டுவந்த நீரஜ் சோப்ரா சிறப்பாகவே செயல்பட்டார், தங்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கையை தோள்களில் சுமந்து ரன்மேடைக்கு வந்தவர், ஒரு சாம்பியனுக்குரிய அத்தனையையும் களத்தில் செய்தார். நீங்கள் எப்போதும் சிறந்தவர் நீரஜ் சோப்ரா, இன்று உங்களுடைய நாள் இல்லை அவ்வளவுதான்..