சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடி வருபவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். அதிக ரன்கள் அடித்தவர், அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என பல மைல்கற்களை சைலான்டாக கடந்து வந்து கொண்டிருப்பவர். அவருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு இது.
இதே நாளில் கடந்த 1982-இல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் பரதநாட்டியம், கிரிக்கெட் என இரண்டிலும் ஒரேநேரத்தில் பயிற்சி பெற்றவர். ஒருகட்டத்தில் நாட்டியமா, கிரிக்கெட்டா என்ற முடிவை எடுக்கவேண்டிய சூழல். இருப்பினும் அன்று அவர் சற்று யோசித்து இருந்தால் இந்நேரம் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் சிறந்த கேப்டன் கிடைக்காமலே போயிருக்கலாம்.
மித்தாலியின் அப்பா விமானப்படை அதிகாரியாக பணியாற்றியவர். இருப்பினும் தனது மகளை கிரிக்கெட் விளையாடவும், அதை கெரியராக அமைத்து கொள்ளவும் அனுமதி கொடுத்த கதையை அவரே விவரிக்கிறார்…
“சிறுவயதில் நான், என் அண்ணனுடன் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தேனாம். அதை கவனித்த என் அப்பாதான் முறையான பயிற்சி இருந்தால் என் ஆட்டத்திறனே மாறிவிடும் என கணித்து கிரிக்கெட் பயிற்சி பள்ளியில் கோச்சிங்கிற்காக சேர்த்துவிட்டார். கோச்சிங் சேர்த்துவிட்டது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளிக்கு அழைத்து செல்வது, அங்கிருந்து பயிற்சிக்கு அழைத்து செல்வது என அவரது பிஸியான பணிச் சூழலிலும் என் ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக செலவிட்டவர். எப்போதுமே என் அப்பாதான் என் முதல் ஹீரோ. என்னுடைய எந்த முடிவுக்கும் இதுவரை அவர் 'நோ' சொன்னதே இல்லை” என்கிறார்.
செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கிரிக்கெட் கோச்சிங் சென்டரில்தான் மித்தாலி ஆரம்பகால பயிற்சியைத் தொடங்கினார். அங்கு பயிற்சியாளராக இருந்த ஜோதி பிரசாத் தான் மித்தாலிக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து கிரிக்கெட்டில் மெருகேற்றியுள்ளார். தொடர்ந்து அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரான சம்பத் குமாரிடம் பயிற்சி பெற்று தேசிய அணியில் பங்கேற்று விளையாடுவதற்கான தகுதியை மேம்படுத்தியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அபராமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அப்போதைய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனைகளோடு விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதோடு 14 வயதிலேயே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். இருப்பினும் அது நழுவிவிட 1999-இல் சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக விளையாட அறிமுகமானார்.
அதன் பிறகு டெஸ்ட் (2002) மற்றும் டி20 (2006) போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தினார். 2005-இல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் மித்தாலி. அப்போது சீனியர் வீரர்களின் துணையோடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2005 உலக கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை வழிநடத்தினார். அதேபோல 2017-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரிலும் அணியை இறுதி போட்டி வரை வழிநடத்தி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
209 ஒருநாள் 6888 ரன்கள் என 21 ஆண்டுகளாக கிரிக்கெட் களத்தில் புலிப் பாய்ச்சலோடு செயல்பட்டு வருகிறார்.
“பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஸ்போர்ட்ஸ் கேரியரில் வெல்லலாம்” என வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறார் மித்தாலி.
பிறந்தநாள் வாழ்த்துகள் மித்தாலி!