மும்பை அணிக்கு எதிரான ஐபில் போட்டியில் பஞ்சாப் அணிக்காக பந்துவீசிய அஸ்வின் ஒரு ஓவருக்கு 7 பந்துகள் வீசினாரா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஐபில் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். கையோடு அவரே முதல் பந்தினையும் வீசினார்.
முதல் 6 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே அஸ்வின் விட்டுக் கொடுத்தார். முதல் ஓவர் முடிந்துவிட்டது என்று பார்க்கையில் மீண்டும் ஒரு பந்தினை அவர் வீச அந்த பந்தில் டிகாக் பவுண்டரி அடித்தார். அதனால், மொத்தம் 7 பந்துகள் வீசப்பட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ESPN, Cricbuzz உள்ளிட்ட இணையதளங்களிலும் 7 பந்துகள் என்றே கணக்கிட்டிருந்தது. அதனால், சற்றே குழப்பம் உருவானது. ஆனால், போட்டி இயல்பாக சென்று கொண்டிருந்தது.
இதனிடையே, ட்விட்டர் உடனடியாக ஒரு ஓவருக்கு 7 பந்துகளா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கெனவே பெங்களூர், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முக்கியமான கடைசி பால் ‘நோ’ பந்தாக இருந்ததை அம்பயர் கவனிக்க தவறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மான்கட் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் மீண்டும் 7 பந்துகள் வீசியது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், அஸ்வின் வீசிய முதல் பந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. பேட்ஸ்மேன் சரியாக தயாராகாததால் நடுவர் அந்த பந்தினை டாட் ஆக அறிவித்ததாக கூறப்படுகிறது.