விளையாட்டு

டி-20 தொடரில் இடம் கிடைக்காதது பற்றி கவலையில்லை: குல்தீப்

டி-20 தொடரில் இடம் கிடைக்காதது பற்றி கவலையில்லை: குல்தீப்

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பெறாதது பற்றி கவலையில்லை என்று சுழற்பந்துவிச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். 24 வயதான இவர், 6 டெஸ்டில் 24 விக்கெட்டுகளும், 53 ஒரு நாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும், 18 டி-20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்களில் சேர்க்கப்படவில்லை. பேட்டிங்கும் செய்யக் கூடிய சுழல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் இவரையும் சாஹலையும் சேர்க்காமல், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பெறாதது பற்றி கவலையில்லை என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ’குறுகிய வடிவிலான போட்டிகளில் இதுவரை சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். இருந்தாலும் கடந்த 2 டி-20 தொடர்களில் என்னை தேர்வு செய்யாதது பற்றி கவலையில்லை. எனக்கு ஓய்வு தேவை என்று தேர்வாளர்கள் நினைத்திருந்திருக்கலாம். அல்லது அணியில் சில மாற்றங்கள் தேவை என்றும் நினைத்திருக்கலாம். அவர்கள் முடிவை மதிக்கிறேன். இப்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கிறேன். அதில் நன்றாக செயல்படுவதற்கான வாய்ப்பாக இதை கருதுகிறேன்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி விட்டு திடீரென டெஸ்ட்டில் ஆடும்போது, அதில் உடனடி யாக சாதிப்பது கடினம். அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா, நான் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளோம். சரியான கலவையில் அணிக்கு தேர்வு செய்வது கடினம் தான். இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.