நான் விரும்பிய வழியில் இந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டி இருக்கவில்லை என சாய்னா நேவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
இன்று நடைபெற்ற இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சாய்னா நேவால் சந்தித்தார். போட்டி தொடங்கியது முதலே ஆக்ரோஷமான விளையாட்டை கரோலினாவும் - சாய்னாவும் வெளிப்படுத்தினர். முதல் செட்டில் மரின் 10-4 என முன்னணியில் இருந்த போது திடீரென்று காயத்தினால் பாதிக்கப்பட்டார் கரோலினா. விளையாட்டை தொடர முயற்சி செய்தும் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
ஒருகட்டத்தில் வலியால் கதறி அழத்தொடங்கினார். அப்போது அவரது பயிற்சியாளர்களும், சாய்னா நேவாலும் கரோலினாவுக்கு ஆறுதல் கூறினர். தசைப்பிடிப்பு காரணமாக நிற்கக்கூட முடியாத நிலையில் போட்டியில் இருந்து விலகுவதாக கரோலினா அறிவித்தார். இதனையடுத்து எதிர் முனையில் விளையாடிய சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தான் விரும்பிய வழியில் இந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டி இருக்கவில்லை என சாய்னா நேவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் விரும்பிய வழியில் இந்த பேட்மிண்டன் இறுதி போட்டி இருக்கவில்லை. காயம் என்பது வீரர்களின் மோசமான நிலை. உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான கரோலினை காயத்துடன் பார்த்தது மிகவும் துரதிஷ்டவசமானது. கரோலினா விரைவாக குணமடைந்து மீண்டு வர வேண்டுமென நான் விரும்புகிறேன். சீக்கிரம் திரும்பி வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Not the way I wanted it in the finals of #indonesiamasterssuper500 ... injuries are worst for players and it was very unfortunate to see @CarolinaMarin the best player in women’s badminton to face it today in the match .. I wish u a very speedy recovery