விளையாட்டு

உயிரிழந்த என் நண்பனுக்கு சதத்தை அர்ப்பணிக்கிறேன் - ரோகித் உருக்கம்

உயிரிழந்த என் நண்பனுக்கு சதத்தை அர்ப்பணிக்கிறேன் - ரோகித் உருக்கம்

rajakannan

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அடித்த சதத்தை ரோகித் சர்மா ஸ்பெஷலாக ஒருவருக்கு அர்ப்பணித்துள்ளார்.

ரோகித் சர்மா சமீப காலமாக தான் அடிக்கும் இரட்டை சதம், சதத்தினை தனது மனைவி ரித்திகாவுக்கு அர்ப்பணிப்பார். அந்த நேரங்களில் ரோகித்-ரித்திகா படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்த போது கேலரியில் இருந்த ரித்திகாவுக்கு அதனை முத்தமிட்டு அர்ப்பணித்தார். அன்று அவர்களுக்கு திருமண நாள். திருமண நாள் பரிசாக அந்த சதத்தை அர்ப்பணித்தார்.

இப்படியிருக்கையில், நேற்றைப் போட்டியில் அடித்த சதத்தை ரோகித் நண்பன் சுதனுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித், “நேற்றைய என்னுடைய ஆட்டத்தை உயிரிழந்த என்னுடைய நண்பன் சுதனுக்கு அர்பணிக்கிறேன். இந்த உலகத்தை அனைவரும் வாழ சிறந்த இடமாக மாற்றுவதற்கான வழியை நாம் அனைவரும் உருவாக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

உடனே யார் அந்த சுதன் என்ற கேள்வி இங்கு இயல்பாக எல்லோருக்கும் எழும். ரோகித் சர்மாவை தொடர்ச்சியாக பின் தொடரும் சிலருக்கும் மட்டுமே இது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. சுதன் என்பது ஒரு ஆண் காண்டாமிருகம். உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம் இது. இந்த காண்டாமிருகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தது.

45 வயதான அது உடல்நலக் குறைவு காரணமாக தனது கடைசி நாட்களில் மிகவும் சிரமப்பட்டது. ஒவ்வொரு நாளும் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த காண்டாமிருகத்துடன் எடுத்துக் கொண்ட படத்தை ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார்.