விளையாட்டு

ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பையையும் மிஸ் செய்யப் போகும் பும்ரா?

ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பையையும் மிஸ் செய்யப் போகும் பும்ரா?

JustinDurai

காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும்  பங்கேற்பது சிரமம் தான் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அழுத்தத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 25 செப்டம்பர் 2022 முதல் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத பும்ரா, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளையும் தவறவிட்டார். புத்தாண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பும்ரா, காயத்தில் இருந்து முழுமையாக திரும்பாத காரணத்தால் அவர் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா இடம் பெறுவதற்கு முக்கியமானதாக இருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் அவர் இடம்பெறவில்லை.  

வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்காவது வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அதிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இந்நிலையில் பும்ரா அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதுகுப்பகுதியில் உள்புறத்தில் தீவிரமான பிரச்னை இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் 6  மாதங்கள் வரை குணமடைய எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. இதனால் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் பங்கேற்பது சிரமம் தான் எனக் கூறுகின்றனர்.

'அக்டோபர், நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியே அவரது இலக்கு. அதுவும் உறுதி கிடையாது' என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரிகிறது.

29 வயதான பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் மிக முக்கியமான. கடந்த 2016ல் அறிமுகமான இவர் 30 டெஸ்ட் (128 விக்கெட்), 72 ஒருநாள் (121 விக்கெட்), 60 டி20 (70 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது யார்க்கர்கள் எதிரணி வீரர்களின் திணற செய்யும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடி வரும் வீரர். ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். காயத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பும்ராவின் வருகையை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.