விளையாட்டு

எப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க ? ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது. இவர் ஏற்கெனவே இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 210 ரன்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 88 ரன்கள் என ஆட்டம் சிறப்பாகவே அமைந்திருந்தது.

ஆனால், அதன் பின் நடைபெற்ற ஒருநாள் போட்டி அணியில் ஸ்ரேயாஸ் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்திய ஏ அணிக்காக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். மேலும் கேப்டன் பொறுப்பேற்று வெற்றிகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில்
பெங்களூருவில் இந்திய ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தியது. 

இந்தப் போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் " தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் அதிக ரன்களை நான் குவித்தாலும், தேசிய சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் பொறுமையாக இருப்பது கடினமாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் சீனியர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடினால் ஆட்டத்திறன் மேலும் மேம்படும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.