விளையாட்டு

ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

ச. முத்துகிருஷ்ணன்

ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரின் தற்போதைய மோசமான ஃபார்ம் குறித்து தமக்கு கவலையில்லை என்றும் அவர்களுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது என்பதாகும். இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோலி 113.46 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 19.67 சராசரியில் 236 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மற்றும் மூன்று கோல்டன் டக் அவுட்களும் அடங்கும். தனது 14 வருட ஐபிஎல் பயணத்தில் கோலியின் மோசமான ஆட்டம் இதுவாகும்.

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா 12 ஆட்டங்களில் வெறும் 18.17 சராசரியுடன் 125.29 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் ஐந்து ஒற்றை இலக்க ஸ்கோர்கள் மற்றும் ஒரு டக் அவுட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சீசனில் ரோகித் இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. ஏற்கெனவே பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளது.

ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி “ரோகித் அல்லது விராட் ஃபார்ம் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் மிகவும் நல்லவர்கள்... உண்மையான பெரிய வீரர்கள். உலகக் கோப்பை வெகு தொலைவில் உள்ளது, போட்டிக்கு முன்பே அவர்கள் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.