விளையாட்டு

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: ராஜீவ் சுக்லா

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: ராஜீவ் சுக்லா

webteam

புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக, உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.

பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இரு நாட்டு தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று பிரதமர் மோடி கூறிவிட்டார்.

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்து பரவலாகி வருகிறது. ’’பாகிஸ்தானுடன் விளையாடாமலே உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணி வலிமையாக உள்ளது” என்று இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘’மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டோம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கக்கூடாது’’ என்றார்.