விளையாட்டு

சாஹல், புவனேஷ் இல்லை! முதல் இந்தியராக டி20-ல் 100 விக்கெட் எடுத்து தீப்தி சர்மா சாதனை!

சாஹல், புவனேஷ் இல்லை! முதல் இந்தியராக டி20-ல் 100 விக்கெட் எடுத்து தீப்தி சர்மா சாதனை!

Rishan Vengai

பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார், இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா.

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 12ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸின் அதிரடியான பேட்டிங்கின் காரணமாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியை வென்றதையடுத்து, இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச ரன்களை துறத்தி வெற்றிபெற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்நிலையில் லீக் சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு தனது அற்புதமான சுழலால் தண்ணி காட்டினார், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா. 4 ஓவர்களை வீசிய தீப்தி, 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தீப்தியின் சுழலை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டிஸ் அணியால் 20 ஓவர்களுக்கு 118 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

119 ரன்களை இலக்காக துறத்திய இந்திய அணி ரிச்சா கோஸின் அதிரடியான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. சிறப்பாக பேட்டிங் செய்த ரிச்சா கோஸ் 5 பவுண்டரிகள் விளாசி 44 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வெஸ்ட் இண்டிஸ் டாப் ஆர்டர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த தீப்தி சர்மா ஆட்டத்தின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாஹல், புவனேஷ்குமார் இல்லை! முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற இமாலய சாதனையை படைத்து, வரலாற்றில் தனது பெயரை மற்றவீரர்களுக்கு முன்னதாக பொறித்துள்ளார் தீப்தி.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்களில் சாஹல் 91 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில், 87 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் தீப்தி சர்மா 100 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தீப்தி சர்மாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் பூனம் யாதவ் 98 விக்கெட்டுகளுடன் 100 விக்கெட்டுகளை கைப்பற்றும் முனைப்பில் பின்வரிசையில் இருக்கிறார்.

முதல் இந்தியராக 100 விக்கெடுகள் எடுத்த பிறகு பேசிய தீப்தி, “ நான் நன்றாக உணர்கிறேன். டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் என்பது ஒரு மைல்கல் சாதனையாகும், இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தவாறு, ஸ்டம்ப் லைன்களில் போட நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த நினைக்கிறேன்” என்று கூறினார்.