இலங்கைக்கு எதிரான முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா வீசிய நோ-பால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இலங்கை- இந்திய கிரிக்கெட் அணி மோதிய முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 112 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர், இந்திய அணி பீல்டிங் செய்தபோது, பும்ரா வீசிய பந்து கேட்சாக மாறியது. பின்னர் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கண்டத்தில் இருந்து தப்பினார் இலங்கை பேட்ஸ்மேன் உபுல் தாரங்கா. இவர் அவுட் ஆகியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஆனால் நோ-பால் கண்டத்தில் இருந்து தப்பிய அவர், 46 ரன்கள் எடுத்து அணியில் வெற்றிக்கு உதவினார்.
பும்ராவின் நோ-பால் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பாக பேசப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் பும்ரா, வீசிய பந்தில் ஓபனிங் பேட்ஸ்மேன் பகார் ஜமான் அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதால் தப்பிய அவர், செஞ்சுரி அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற உதவினார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்மன்ஸ்க்கு எதிராகவும் நோ-பால் வீசி விக்கெட் எடுத்த பெருமை பும்ராவுக்கு உண்டு. இதையெல்லாம் வைத்து, பும்ராவின் நோ-பாலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து எடுத்துவிட்டனர். ஒருவர் ‘நோ பால்’-க்கு ’பும்ரா பால்’-னு பேர் வையுங்க’ என்று கூறியிருந்தார் கடுப்பில். இன்னொருவர், ’நோ-பால் வீச நூறுவழிகள்’ என்று பும்ரா புத்தகம் எழுதலாம் என்றும் ’இந்தியாவுக்கு எப்படி அதிக ரன் எடுக்கலாம்? பும்ரா பந்துவீசினால் போதும்’ என்றும் கலாய்த்துள்ளனர்.