விளையாட்டு

'பயமா எனக்கா ?' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி !

'பயமா எனக்கா ?' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி !

இங்கிலாந்து அணிக்கு எந்த பயமும் இல்லை, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு செல்வோம் என்று இங்ககிலாந்து கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இதனால் அந்த அணி அடுத்தடுத்தப் போட்டிகளில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் "இங்கிலாந்து கேப்டன் மார்கனுக்கு போட்டி தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க பயமும் பதற்றமும் கொள்கிறார்" என விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து ஆஸியுடனான தோல்வி குறித்து பேசிய மார்கன் "இந்தத் தோல்வியில் இருந்து எப்படியும் மீண்டு வெற்றிப் பயணத்தை தொடருவோம். வெற்றியோ தோல்வியோ அதற்கு நானே பொறுப்பு. மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்று கட்டாயம் நாங்கள் அரையிறுதிக்கு செல்வோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் எங்களின் அடிப்படை பேட்டிங்கை விட்டுவிட்டோம்."

"நாங்கள் வழக்கம் போல அதிரடியான ஆட்டத்தை தொடர வேண்டும். நாங்கள் அந்த ஆட்டத்தை கைவிட்டதுதான் தோல்விக்கு காரணண். ஆனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்து வீசியது. பொதுவாக நாங்கள் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால், அது குறித்து ஆலோசிப்போம். இனிவரும் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் எங்களிடம் இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடனான ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்கொள்வோம். ஆனால் எனக்கோ என் அணிக்கோ எவ்வித பயமும் பதற்றமும் இல்லை" என்றார் மார்கன்.