விளையாட்டு

’14 வருசமா அம்மாவோட கேள்விக்கு பதில் இல்லாம இருந்தேன்!’ டிகிரி வாங்கியபிறகு ஷகிப் உருக்கம்

’14 வருசமா அம்மாவோட கேள்விக்கு பதில் இல்லாம இருந்தேன்!’ டிகிரி வாங்கியபிறகு ஷகிப் உருக்கம்

Rishan Vengai

வங்கதேசத்தின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசன், வங்கதேசத்தில் உள்ள் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டம் பெற்றதற்கு பிறகு உருக்கமாக பேசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 300+ விக்கெட்டுகள் மற்றும் 7000+ ரன்கள் என அடுத்தடுத்து பல சாதனைகளை நிகழ்த்தி வரும், வங்கதேச கிரிக்கெட்டின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன், தன்னுடைய வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான நிகழ்வை சாதித்து காட்டியுள்ளார். அதன்படி ஷகிப் அல் ஹசன் பிபிஏ பட்டப்படிப்பை முடித்த பிறகு தனது புகழ்பெற்ற தொப்பியில் மற்றொரு பொக்கிஷ இறகை சேர்த்துள்ளார். மார்ச் 19ஆம் தேதியான நேற்று வங்கதேசத்தில் இருக்கும், அமெரிக்கன் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியில் (AIUB) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, தன்னுடைய பிபிஏ பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

பட்டம் பெற்றுக்கொண்டதற்கு பிறகு கண்கலங்கியவாறு, எதையோ சாதிக்க முடியாததை சாதித்தவாறு காட்சியளித்த அவர், மேடையில் மிகவும் உருக்கமான பேச்சை வெளிப்படுத்தினார். மேடையில் பேசிய அவர், “நான் என்னுடைய படிப்பிற்கான பட்டத்தை அடைய எனக்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டுவிட்டது. முதன் முதலில் நான் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட செல்லும் போதெல்லாம், என் அம்மா என்னை அழைத்து உன் படிப்பு என்னாச்சுப்பா என்று கேட்பார். கிட்டத்தட்ட 14 நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இறுதியாக நான் என்னுடைய பிபிஏ பட்டத்தை முடித்திருக்கிறேன். என் அம்மாவை பெருமைபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். இது எனக்கு என் கனவு நனவான தருணம்” என்று உருக்கமாக பேசினார்.

மேலும் "கோண்டேகர் சாகிப் அல்-ஹசன்" என்று அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை பெற்றுக்கொண்ட ஷகிப், “இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கனவை நான் அடைந்துவிட்டேன். என் அம்மாவை பெருமைபட வைத்துவிட்டேன். வேறு எதுவும் பெரிதாக பேச எதுவும் இல்லை. இங்கு எல்லோரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரின் வாழ்க்கையும் தொடர்ந்து முன்னேறும் என்று நம்புகிறேன்.

மேலும் ஒன்று மட்டும் தான் எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.” நீங்கள் கனவு காணும்போது, பெரியதாக கனவு காணுங்கள், பின்னர் அதற்கு உண்மையாக இருந்து கடினமாக உழையுங்கள், உங்கள் கனவு ஒருநாள் நிச்சயம் உங்களின் கைகளுக்கு வந்து சேரும். நாம் அனைவரும் சேர்ந்து நம் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வோம்” என்று பேசினார்.